ரோஹித்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்!! ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி

By karthikeyan VFirst Published Oct 30, 2018, 9:52 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மா - ராயுடு ஜோடியின் அபார ஆட்டத்தால் மிகப்பெரிய ஸ்கோரை அடைந்தது. அபாரமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 21வது சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா, 4வது இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 162 ரன்களில் ஆட்டமிழந்தார். 

4வது இடத்திற்கு சரியான வீரரை தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு வரப்பிரசாதமாக கிடைத்த ராயுடு, தன் பங்கிற்கு அவரும் சதம் விளாசினார். இதையடுத்து இந்திய அணி 377 ரன்களை குவித்தது. 

378 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமாக சொதப்பியது. ஹோப், பவல் ஆகியோர் தேவையில்லாமல் ரன் அவுட்டாகினர். இந்திய அணி பவுலிங்கில் மிரட்டியது. கலீல் அகமதுவும் குல்தீப்பும் அசத்தலாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த அணியின் அதிரடி வீரரான ஹெட்மயர், கடந்த மூன்று போட்டிகளிலும் அதிரடியாக ஆடி போட்டியின் போக்கை மாற்றினார். நேற்றும் அதை முயற்சி செய்தார். ஆனால் கலீல் அகமதுவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் அந்த அணி ரோஹித் சர்மா அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் வெறும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். 

இந்த வெற்றி இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று. முதலில் பேட்டிங் செய்து அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இது மூன்றாவது மிகப்பெரிய வெற்றி. இது மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாக இருந்தாலும் இதுதான் முதல் மிகப்பெரிய வெற்றியாக வைத்துக்கொள்ளலாம். 

ஏனென்றால் இதற்கு முன்னதாக அதிகபட்ச ரன்களில் இந்திய அணி பெற்ற இரண்டு வெற்றிகளுமே மிகச்சிறிய அணிகளோடுதான். 2007ம் ஆண்டு பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும் 2008ம் ஆண்டு ஹாங்காங் அணிக்கு எதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாகத்தான் இந்த வெற்றி உள்ளது. ஆனால் அவை இரண்டுமே முழுநேர அணிகள் கிடையாது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பெற்ற 224 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிதான் பெரிய அணிக்கு எதிராக பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும்.
 

click me!