நான் என்ன நாய் மாதிரியா இருக்க முடியும்..? ஷேன் வார்னேவுக்கு ஸ்டீவ் வாக் பதிலடி

By karthikeyan VFirst Published Oct 26, 2018, 4:14 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மீது ஷேன் வார்னே முன்வைத்த விமர்சனங்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த விமர்சனங்களுக்கு ஸ்டீவ் வாக் முதன்முறையாக விளக்கமளித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மீது ஷேன் வார்னே முன்வைத்த விமர்சனங்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த விமர்சனங்களுக்கு ஸ்டீவ் வாக் முதன்முறையாக விளக்கமளித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, ”நோ ஸ்பின்” என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை கடுமையாக சாடியிருந்தார். 

ஸ்டீவ் வாக் குறித்து எழுதிய ஷேன் வார்னே, நான் ஆடியதிலேயே மிகவும் சுயநலவாதி ஸ்டீவ் வாக் தான். அவர் 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை தவிர வேறு எதுவுமே அவருக்கு முக்கியமில்லை. 1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் வாக் கேப்டன், நான் துணை கேப்டன். இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் நான் சரியாக பந்துவீசவில்லை. 

எனவே என்னை 4வது போட்டியிலிருந்து நீக்க முடிவெடுத்த ஸ்டீவ் வாக், அவருக்கும் எனக்குமான ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது, அணியின் பயிற்சியாளர் ஜெஃப் மார்ஷ் என்னிடம் வந்து ஷேன், நீ அடுத்த போட்டியில் ஆடமுடியாது என்று கூறினார். நான், ஏன் என கேட்டேன். அதற்கு நீ நன்றாக பந்து வீசுவதுபோல் தெரியவில்லை, அதனால்தான் என்றார். நீங்கள் சொல்வது சரிதான், எனது தோள்பட்டை காயம் முழுவதுமாக குணமடைந்துவிடும் என எண்ணினேன். ஆனால் அது குணமடைய நீண்ட நாட்கள் ஆகிறது. அதனால்தான் சரியாக வீசமுடியவில்லை. ரிதம் மெதுவாகத்தான் வரும். ஆனால் கவலையில்லை என்றேன். ஆனால் எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அப்போது ஆலன் பார்டர்(ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்) எனக்கு ஆதரவாக பேசினார். ஷேன் வார்னே அணிக்கு செய்த நன்மைகளை கருதி அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆலன் கூறினார். ஆனால் ஆலனின் கருத்தை ஏற்க ஸ்டீவ் வாக் மறுத்துவிட்டார்.

உங்களது சிந்தனையை பாராட்டுகிறேன் ஆலன். ஆனால் ஷேன் வார்னே இந்த போட்டியில் ஆடப்போவதில்லை. நான் இந்த முடிவை தைரியமாகவே எடுக்கிறேன் என ஸ்டீவ் வாக் ஆலன் பார்டருக்கு பதிலளித்தார். நான் அந்த போட்டியில் ஆடவில்லை. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அணிக்காக எனது பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்ற வேதனை எனக்கு இருந்தது. நான் நன்றாக ஆடியிருக்க வேண்டும். எனினும் நான் நன்றாக ஆடவில்லை என்று என்னை அணியை விட்டு நீக்குவதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் நல்ல நண்பராக கருதிய ஸ்டீவ் வாக் என்னை கைவிட்டுவிட்டார். அவருக்கு பல தருணங்களில் நான் ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால் அவர் என்னை கைவிட்டுவிட்டார் என்பதே வேதனை.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் சில வீரர்கள் ஸ்டீவ் வாக்கின் கேப்டன்சி, பீல்டிங் வியூகம் குறித்து என்னிடம் விமர்சனம் செய்தனர். நான் அப்போது கூட ஸ்டீவ் வாக்கிற்கு ஆதரவாகவே பதில் அளித்தேன். ஆனால் அவர் எனக்கு கைமாறு செய்யவில்லை. கேப்டனானவுடன் ஸ்டீவ் வாஹ் முற்றிலும் வேறு ஒரு மனிதராகி விட்டார். அவர் என்னை நீக்கியதால் அல்ல. நான் சரியாக ஆடவில்லை எனில் என்னை நீக்குவது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் வெறும் என் ஆட்டம் மட்டுமே அங்கு விஷயமல்ல. அதைத்தாண்டியும் சில விஷயங்கள் இருந்தன என்பதுதான் முக்கியம் என மனவேதனையுடன் எழுதியுள்ளார். 

இந்நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை சுயநலவாதி என்று வார்னே விமர்சித்தது குறித்து பேசிய ஸ்டீவ் வாக், இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் கருதுவதால் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். 

ஆனால் ஷேன் வார்னேவை அணியிலிருந்து நீக்கியது குறித்து விளக்கமளித்த ஸ்டீவ் வாக், அணியின் கேப்டனாக ஒரு தலைவனாக அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அது. வார்னேவுக்கு நான் விசுவாசமாக இல்லை என்று கூறியிருக்கிறார். விசுவாசமாக இருப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. குருட்டுத்தனமான விசுவாசியாக இருக்க முடியாது. வார்னே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அணியின் நலன் கருதி சில நேரங்களில் ஒரு கேப்டனாக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதைத்தான் அந்த நேரத்தில் நானும் செய்தேன் என ஸ்டீவ் வாக் விளக்கமளித்துள்ளார். 
 

click me!