தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மீண்டும் விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை…

First Published Jun 8, 2017, 9:45 AM IST
Highlights
Sports Ministry request to give Bharat Ratna Award to Dayan Chand


வலைகோல் பந்தாட்ட விளையாட்டு ஜாம்பவான் தயான் சந்துக்கு, பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களுக்கு கூறியது:

“மறைந்த ஹாக்கி வீரர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

அவருக்கான அந்த விருது, இந்தியாவின் விளையாட்டுத் துறையில் அவரது பங்களிப்புக்கான தகுந்த கெளரவமாக இருக்கும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதிக விளையாட்டு வீரர்கள் இருக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க விரும்பும் அவர், அதன் காரணமாகவே விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்துக்கு வலியுறுத்தி வருகிறார்.

எனவே, தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை பிரதமர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

அவருக்கான அந்த விருது, இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் இதர விளையாட்டுகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்” என்று விஜய் கோயல் கூறினார்.

1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்த தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் கோருவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

tags
click me!