
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது இந்திய ரசிகர் ஒருவர் இன ரீதியாக தன்னை திட்டியதாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் வான்டரர்ஸில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தாஹிர், தென் ஆப்பிரிக்காவின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர், அணி வீரர்களுக்கு உதவியாக செயல்பட்டபோது வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணி மேலாளர் முகமது மூசாஜீ, "தாஹிர் அளித்த தகவலின்படி, மைதானத்தையும், வீரர்களின் ஓய்வு அறையையும் இணைக்கும் பாதையில் அவர் சென்றுவந்தபோதெல்லாம் சம்பந்தப்பட்ட இந்திய ரசிகர் இனரீதியாக தாஹிரை விமர்சித்துள்ளார்.
இதையடுத்து தாஹிர் மைதான பாதுகாவலர்கள் இருவருடன் அவர் இருந்த இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாவலர்கள் அந்த ரசிகரை மைதானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களிடையே எந்தவொரு மோதலும் ஏற்படவில்லை.
மேலும், தாஹிரின் வாக்குமூலத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.