தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த தனி ஒருவன் “மார்ட்டின் கப்டில்”…

First Published Mar 2, 2017, 12:00 PM IST
Highlights
South Africa defeated the lone man Martin Guptill


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் 138 பந்துகளில் 11 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் தனியொரு வீரராக இருந்து தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தார்.

நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் டக் அவுட்டாக, ஆம்லாவுடன் இணைந்தார் டூபிளெஸ்ஸிஸ்.

இந்த ஜோடி 65 ஓட்டங்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஆம்லா 38 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் சேர்த்து ஜீதன் படேல் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதன்பிறகு வந்த டுமினி 25 ஓட்டங்களில் நடையைக் கட்ட, டூபிளெஸ்ஸிஸ் 97 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு டேவிட் மில்லர் 1, பிரிட்டோரியஸ் 10 ஓட்டங்களில் நடையைக் கட்ட, கேப்டன் டிவில்லியர்ஸுடன் இணைந்தார் கிறிஸ் மோரீஸ். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்தது. வேகமாக ஆடிய மோரீஸ் 28 ஓட்டங்கள் சேர்த்து போல்ட் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதையடுத்து டிவில்லியர்ஸுடன் இணைந்தார் வேயன் பர்னெல். இந்த ஜோடி கடைசிக் கட்டத்தில் வெளுத்து வாங்கியது. கடைசிப் பந்தில் வேயன் பர்னெல் ரன் அவுட்டானார். அவர் 12 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் குவித்தார். டிவில்லியர்ஸ் - பர்னெல் ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 63 ஓட்டங்கள் குவித்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஜீதன் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் பிரெளன்லி 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, மார்ட்டின் கப்டிலுடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய கப்டில், வேயன் பர்னெல் வீசிய 4-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கினார். தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்ட கப்டில் 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

அந்த அணி 77 ஓட்டங்களை எட்டியபோது கேன் வில்லியம்சன் 21 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ராஸ் டெய்லர் களம்புகுந்தார். அவர் ஒருபுறம் நிதானம் காட்ட, மறுமுனையில் தொடர்ந்து வெளுத்து வாங்கிய கப்டில் 82 பந்துகளில் சதமடித்தார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 12-ஆவது சதமாகும். இதனால் 35 ஓவர்களில் 200 ஓட்டங்களை எட்டியது நியூஸிலாந்து.
இதன்பிறகு டெய்லர் 83 பந்துகளில் அரை சதமடிக்க, கப்டில் 123 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார். அந்த அணி 257 ஓட்டங்களை எட்டியபோது டெய்லர் ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து லியூக் ரோஞ்சி களமிறங்க, இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை முடித்தார் கப்டில். நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் குவித்து வெற்றி கண்டது.

கப்டில் 138 பந்துகளில் 180, ரோஞ்சி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட் வீழ்த்தினார். கப்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் வரும் சனிக்கிழமை ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

tags
click me!