
தென்னாப்பிரிக்க சென்றுள்ள இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை இழந்தாலும் 4-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இந்த தொடரில் சாஹல், குல்தீப் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பங்களிப்பு அளப்பரியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி வென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பவுலிங் தான் மிக முக்கிய காரணம். சாஹலும் குல்தீப்பும் வருவதற்கு முன்னர், சிறந்த பேட்டிங் அணியாக இருந்த இந்திய அணி, தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.
புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட, சாஹலும் குல்தீப்பும் சுழலில் அசத்துகின்றனர். சாஹல் மற்றும் குல்தீப்பின் சுழலை ஆட முடியாமல் தென்னாப்பிரிக்க அணியினர் திணறுகின்றனர். 5 போட்டிகளிலும் சாஹல், குல்தீப்பின் சுழலில் வீழ்ந்தனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.
கடந்த 5 போட்டிகளில் மட்டும் சாஹலும் குல்தீப்பும் இணைந்து 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைப்பதற்கு சாஹலும் குல்தீப்பும் முக்கிய காரணம்.
சர்வதேச அளவில் அனைத்து அணிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர் இவர்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன், இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. அதற்காக அந்த அணியை பாராட்டியே தீர வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியின் டாப் 3 வீரர்களில் ஒருவர் சதமடித்திருக்கிறார். எங்கள் அணி சார்பில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் எங்கள் தோல்விக்கு காரணம். எனினும் இந்தியாவிற்கு எதிரான தொடரிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அது 2019 உலக கோப்பைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இருவரும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள். ஆனால், அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் சிறப்பாக பந்து வீசுவார்கள் என நான் நினைக்கவில்லை.
ஏனென்றால், இங்கிலாந்தில் இங்கு போன்று பந்து நன்றாக சுழலாது. எனவே சாஹலும் குல்தீப்பும் இங்கிலாந்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என நினைக்கவில்லை என ஓட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.