ஹர்திக் பாண்டியா சாதாரண ஆல்ரவுண்டர் இல்லங்க.. அவர் வேற லெவல் பிளேயர்!! தென்னாப்பிரிக்க ஜாம்பவான் புகழாரம்

First Published Feb 15, 2018, 3:01 PM IST
Highlights
shaun pollock praised indian all rounder hadik pandya


ஹர்திக் பாண்டியாவை வெறுமனே ஆல்ரவுண்டர் என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்குவிடமுடியாது என தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷான் பொல்லாக் புகழ்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்க சென்றுள்ள இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை இழந்தாலும் 4-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இந்த தொடரில் சாஹல், குல்தீப் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பங்களிப்பு அளப்பரியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டும்தான் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர்.

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில், இடம் மாறி மாறி களமிறக்கப்படுவதால் பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கிலும் பீல்டிங்கிலும் அசத்திவருகிறார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதுவும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில், டுமினி, டிவில்லியர்ஸ் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு அடித்தளமிட்டார் ஹர்திக் பாண்டியா. 

அந்த இரண்டு விக்கெட்டுகளுடன் நின்றுவிடாமல், நிதானமாக ஆடி களத்தில் நங்கூரமிட்டு தென்னாப்பிரிக்க அணியை வெற்றியை நோக்கி இழுத்து சென்ற ஆம்லாவை, நேரடியாக ஸ்டம்பில் அடித்து ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார் பாண்டியா.

ஷாம்சியின் கேட்சை அசாத்தியமாக பிடித்து அசத்தினார் பாண்டியா. இவ்வாறு ஐந்தாவது போட்டியில் வென்று தொடரை இந்தியா வெல்வதற்கு பாண்டியாவின் பங்கும் மிக முக்கியமானது.

பாண்டியாவை கபில் தேவுடன் பலரும் ஒப்பிட்டு வருகின்றனர். அந்தளவுக்கு சிறப்பான ஆல்ரவுண்டராக திகழும் பாண்டியா, அவ்வப்போது பேட்டிங்கில் சொதப்பினாலும் சிறப்பான பவுலிங் மற்றும் பீல்டிங்கால், தன்மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழாமல் பார்த்துக்கொள்கிறார் பாண்டியா.

இந்நிலையில், பாண்டியாவை தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷான் பொல்லாக், ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவரை சாதாரணமாக ஆல்ரவுண்டர் என்ற வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. ஆல்ரவுண்டர் என்றால், ஒரு போட்டியில் 2 அல்லது 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு 10 பந்துகளில் 20 ரன்களை எடுப்பர்.

ஆனால் பாண்டியா அந்த ரகம் அல்ல. டெஸ்ட் போட்டியில் 20 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 100 பந்துகளில் 60 ரன்கள் அடிக்கிறார். ஆனால் அதேநேரத்தில் டி20 போட்டிகளில் அனல்வேகத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் அடித்தும் ஆடி ரன்களையும் குவிக்கிறார்.

களத்தில் வெற்றியை கொண்டாடும் பாண்டியாவின் குணம் அனைவரையும் கவர்கிறது. பாண்டியா கண்டிப்பாக இந்திய அணியில் நீண்ட காலம் பங்காற்றுவார் என ஷான் பொல்லாக் புகழ்ந்துள்ளார்.
 

click me!