
25 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று சரித்திரம் படைத்திருப்பதை நினைத்தால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இந்தத் தொடரில் தொடர்ந்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுவந்த ரோஹித் சர்மா, இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு காரணமாகத் திகழ்ந்தார்.
போர்ட் எலிசபெத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5-வது ஒரு நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி, 126 பந்துகளை எதிர்கொண்டு 115 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு பெரும் பங்களிப்பு அளித்தார் ரோஹித்.
சிறப்பான ஆட்டக்காரர் என்று தன்னை மீண்டும் நிரூபித்த ரோஹித், செய்தியாளர்களிடம், "வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே இந்தத் தொடர் வெற்றியைக் கருதுகிறேன். இரு அணிகளுக்கு இடையேயான வெற்றி என்பதால் இது சிறப்பான வெற்றியாகும்.
இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலும் (2007-08) நாங்கள் வென்றிருக்கிறோம். அந்தத் தொடர் மிகவும் கடினமானதாக இருந்தது. முதல் ஆட்டத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறோம். அதற்கான பலன் கிடைத்து விட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று சரித்திரம் படைத்திருக்கிறோம். இந்நாட்டில் உள்ள ஆடுகளங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும். நிச்சயம் இது சாதாரண வெற்றியல்ல.
அனைத்து புகழும் அணியின் வீரர்களுக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடும் சவாலை சாதித்துக் காட்டி விட்டனர்.
நான் கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இது அனைத்து வீரர்களும் எதிர்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஒரு ஆட்டத்தில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க நேரிட்டுவிட்டால் அவரது ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. 3 ஆட்டங்களில் சோபிக்கத் தவறும்பட்சத்தில் அவர் நல்ல ஆட்டத் திறனில் இல்லை என்ற குற்றச் சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எந்த வீரரையும் அதுபோல் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்ததை நினைத்து பெருமை கொளள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.