
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.
போர்ட் எலிசபெத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 71.3 ஓவர்களில் 243 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், டேவிட் வார்னர் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 118.4 ஓவர்களில் 382 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 126 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 139 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 79 ஓவர்களில் 239 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 75 ஓட்டங்கள் எட்டியிருந்தார்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 6 பேரை வீழ்த்தியிருந்தார்.
இறுதியாக 101 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவில் டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்கள் எடுக்க, கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 2 ஓட்டங்கள் , புருயின் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.
தொடக்க வீரர் மார்க்ரம் 21 ஓட்டங்கள் , உடன் வந்த டீன் எல்கர் 5 ஓட்டங்கள் , ஹஷிம் ஆம்லா 27 ஓட்டங்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 2, ஹேஸில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.