
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை தேர்வு செய்ததற்காக கேப்டன் கோலியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பியது.
முதல் டெஸ்ட் போட்டியில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே சிறந்த பங்களிப்பை வழங்கிய புவனேஷ்வர் குமாருக்கு இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பேட்டிங்கிலும் நம்பிக்கை அளித்தார். 127 பந்துகளை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார் பேட்டிங்கிலும் தனது திறமையை நிரூபித்தார்.
முதல் இன்னிங்சில், 100 ரன்கள் எடுப்பதற்கு உள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை மீட்டெடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு, பக்கபலமாக நின்று உதவினார் புவனேஷ்வர் குமார். இவ்வாறு பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
கேப்டன் கோலியின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நல்ல ஃபார்மில் இருக்கும் புவனேஷ்வர் குமாரை விடுத்து பவுன்சர் என்ற ஒற்றை விஷயத்துக்காக இஷாந்த் சர்மாவை தேர்வு செய்ததற்காக கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
அதேபோல், ரஹானேவை தேர்வு செய்யாமல், மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளித்ததையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
கோலியின் இந்த முடிவுகளுக்காக, கோலியை மூளை மழுங்கியவர் என்றும், டீமை தேர்வு செய்தது அனுஷ்கா சர்மாவாக இருக்குமோ என்றும் கோலியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.