
டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்துவது குறித்து "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் உதவி கேட்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது பிசிசிஐ.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்.
இதையடுத்து டிஆர்எஸ் மூலம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், அதன்பிறகு "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார்.
அதற்கு இந்திய கேப்டன் கோலி எதிர்ப்புத் தெரிவிக்க, ஸ்மித் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இரு நாட்டு வாரியங்களும் அறிக்கைகள் மூலம் மோதிக் கொண்டன.
அதேநேரத்தில் சகவீரர்களின் உதவியை நாடுமாறு ஸ்மித்திடம் கூறியதை டுவிட்டரில் ஹேண்ட்ஸ்காம்ப் ஒப்புக்கொண்டார். இதனிடையே கோலி, ஸ்மித் மீது நடவடிக்கை இல்லை எனக்கூறிய ஐசிசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தது.
இந்த நிலையில் ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோருக்கு எதிராக ஐசிசியிடம் நேற்று புகார் அளித்துள்ள பிசிசிஐ, "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் உதவி கேட்குமாறு ஸ்மித்தை ஹேண்ட்ஸ்காம்ப் வலியுறுத்தும் விடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளது.
ஸ்மித்தும், ஹேண்ட்ஸ்காம்பும் கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக செயல்பட்டதோடு, கிரிக்கெட்டின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சித்ததாகவும் பிசிசிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இது ஐசிசி விதிமுறைப்படி லெவல்-2 விதிமுறை மீறல் ஆகும் என பிசிசிஐ வட்டாரங்கள் பேச்சு.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.