
இதுவரை 10 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 11வது சீசன் நடந்துவருகிறது. 10 சீசனில் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறாத ஒரே அணி டெல்லி தான்.
அதனால் இந்த முறை ஐபிஎல் தொடரை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருந்த நிர்வாகம், ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக நியமித்து, கடந்த காலங்களில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக்கியது.
ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் மற்றும் மேக்ஸ்வெல், கிறிஸ்டியன் போன்ற வெளிநாட்டு அனுபவ வீரர்களுடன் களமிறங்கியது. ஆனால், எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக முதல் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.
தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து கம்பீர் விலகினார். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றார். ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகிய பிறகு, நடந்த முதல் போட்டியில் நேற்று கொல்கத்தா அணியை டெல்லி எதிர்கொண்டது. இந்த போட்டியில் கம்பீர் ஆடவில்லை. இதையடுத்து கேப்டனாக்கிய கம்பீரையே ஷ்ரேயாஸ் நீக்கிவிட்டார் என்ற கருத்துகள் உலாவந்தன.
இந்த போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்வியிலிருந்து டெல்லி அணி மீண்டது. பின்னர் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், கம்பீர் விளையாடாதது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கவுதம் கம்பீர் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு மிகவும் அவசியம். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பேட்ஸ்மேனாக பங்களிப்பு செய்வார் என எதிர்பார்த்தேன்.
ஆனால், தானாக முன்வந்து இந்தப்போட்டியில் ஓய்வு எடுத்துகொள்வதாக தெரிவித்துவிட்டார். கம்பீரை அணியில் எடுக்காமல் நீக்கியது என்னுடைய சொந்த முடிவு அல்ல. இது கம்பீர் தானாக அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டார். உண்மையிலேயே துணிச்சலான முடிவு. கேப்டனாக கடந்த 6 போட்டிகளுக்கு செயல்பட்டு, அந்தப் பதவியை தானாக உதறித்தள்ளி, போட்டியிலும் விளையாடாமல் இருப்பதற்குத் துணிச்சல் வேண்டும். கம்பீர் மீது அதிகமான மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கிறேன் என ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.