
தோனியை பாராட்டிய பாகிஸ்தான் பெண் வர்ணனையாளரை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
உலகின் சிறந்த ஃபினிஷர் என பெயர் பெற்ற தோனி, கடந்த சில மாதங்களாக சரியாக ஆடாததால், அவரது வயதை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், தன் மீதான விமர்சனங்களுக்கு, நடந்துவரும் ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்துவருகிறார் தோனி. பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய தோனி, வெற்றியின் விளிம்பில் வெற்றியை நழுவவிட்டார். ஆனால், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி அணியை வெற்றியடைய செய்தார். மீண்டும் ஒருமுறை தான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்தார்.
இந்நிலையில், தோனியின் பேட்டிங்கை பாராட்டி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் வர்ணனையாளர் ஜய்னப் அப்பாஸ் டுவீட் போட்டிருந்தார். அதில், இந்த உலகிற்கு தான் இன்னும் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபிக்க தோனிக்கு கிடைத்த வாய்ப்பு இது. என்ன ஒரு ஹிட் என பதிவிட்டிருந்தார்.
இவரது இந்த பதிவிற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.
ஜய்னப் அப்பாஸின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருவர் இட்டுள்ள பதிவில், அவர்கள்(இந்திய அணி) நம்முடன் விளையாட விரும்பவில்லை. ஆனால் நீங்கள் அவர்களை ஊக்குவிக்கிறீர்கள். அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை தனித்து விடுகிறார்கள். நாட்டின் பெருமையைவிட தனிமனித விருப்பங்கள்தான் பெரிது என்பதை காட்டிவிட்டீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவரோ, விளையாட்டு துறையின் வர்ணனையாளராக நீங்கள் கருத்து பதிவிட்டுள்ளீர்கள். ஆனால் அதேபோன்று இந்தியாவின் விளையாட்டு வர்ணனையாளர்கள் யாருமே பாகிஸ்தான் சூப்பர் லீக்கை பற்றி பேசவில்லையே என பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.