சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்துடன் மோதல்.. மும்பை இந்தியன்ஸுக்கு தாவும் தவான்..?

By karthikeyan VFirst Published Oct 23, 2018, 10:09 AM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த அணியிலிருந்து ஷிகர் தவான் வேறு அணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த அணியிலிருந்து ஷிகர் தவான் வேறு அணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக வலம்வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப், பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய அணிகள் அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

அடுத்த சீசனுக்கான வீரர்கள் பரிமாற்றம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்த முறை வரும் டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடக்க உள்ளது. அதற்காக ஐபிஎல் அணிகள் திருப்பி கொடுக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 16ம் தேதிக்குள் கொடுக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் கடந்த சீசனில் 2.8 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்த தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக்கை அதே விலைக்கு மும்பை அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு அணி. பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஐபில் சராசரி 124.07. 

மும்பை அணியில் இஷான் கிஷான், ஆதித்யா தரே ஆகிய விக்கெட் கீப்பர்களை வைத்துக்கொண்டே டி காக்கையும் மும்பை அணி எடுத்துள்ளது. விக்கெட் கீப்பாராக இல்லாமல் பேட்ஸ்மேன் ஆப்ஷனுக்காக அவர் எடுக்கப்பட்டிருக்கிறார். குயிண்டன் டி காக்கை எடுத்துள்ள மும்பை அணி, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் இலங்கை ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா ஆகிய இருவரையும் விடுவித்துள்ளது. 

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2013ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ஷிகர் தவான், அந்த அணியுடனான ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் அணி மாறும் தனது முடிவை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க வீரராக உள்ள தவான், வெற்றிகரமான தொடக்க வீரராக உள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சீசனில் ரூ. 5.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். அதேநேரத்தில் மனீஷ் பாண்டேவை அந்த அணி ரூ. 11 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல புவனேஷ்வர் குமார் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் முறையே ரூ. 8.5 கோடி மற்றும் ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர். இவர்களுடன் ஒப்பிடுகையில் தவானுக்கான தொகை மிகவும் குறைவு. 

இதனால் அதிருப்தியில் இருந்த தவான், அதை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷிகர் தவான், அவர் ஏற்கனவே ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கோ அல்லது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கோ மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. 

மும்பை அணி தவானை எடுக்கும் பட்சத்தில், இந்திய அணியின் வெற்றிகரமான ஜோடியான ரோஹித்தும் தவானும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்க ஜோடியாக களமிறங்குவர். பஞ்சாப் அணியும் ராகுலுடன் தவானை களமிறக்க விரும்பும் என தெரிகிறது. எந்த அணியுடன் உடன்பாடு ஏற்படுகிறதோ அந்த அணிக்கு தவான் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!