அவங்க 2 பேரையும் நீங்க டீம்ல இருந்து தூக்கியிருக்க கூடாது!! இந்திய அணியை தெறிக்கவிட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Oct 22, 2018, 4:22 PM IST
Highlights

முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இரண்டு வீரர்களையும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அவசரப்பட்டு நீக்கியிருக்க கூடாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் கருத்து தெரிவித்துள்ளார். 
 

முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இரண்டு வீரர்களையும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அவசரப்பட்டு நீக்கியிருக்க கூடாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக முரளி விஜய் - ஷிகர் தவான் ஜோடி திகழ்ந்தது. ஆனால் அண்மையில் அந்த நிலை மாறிவிட்டது. வெளிநாடுகளில் சொதப்பிவந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சொதப்பியதால் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த தொடரில் தவான் சரியாக ஆடாதபோதும் அந்த தொடர் முழுவதும் வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவரும் புறக்கணிக்கப்பட்டார். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அபாரமாக ஆடி தனது திறமையை நிரூபித்து காட்டினார். ராகுல் சொதப்பினாலும் அவர்தான் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால தொடக்க வீரர் என்பதை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்திய அணியிலிருந்து முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச், முரளி விஜய் மற்றும் ஷிகர் தவானை அணியிலிருந்து அவசரப்பட்டு நீக்கியது முதிர்ச்சியற்ற செயல். இருவருமே மிகச்சிறந்த வீரர்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வந்துவிடக்கூடிய வீரர்கள். தவான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிவருகிறார். ஆனால் முரளி விஜய் டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் ஆடிவந்தார். அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. எனவே அவர் விஷயத்தில் அவசரப்படாமல் காத்திருந்திருக்கலாம் என்று கூறினார். 

மேலும் முரளி விஜய் திறமையான வீரர். அவர் கவுண்டி கிரிக்கெட்டில் எங்கள் எசெக்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். அவர் எங்கள் அணியில் ஆடிய மூன்று போட்டிகளிலும் எங்கள் அணி வென்றது. அவர் ஆடிய 5 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடித்தார். ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே குறைந்த ரன்கள் எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். 

2008ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முரளி விஜய், கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறார். 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3,907 ரன்களை குவித்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறப்பாகவே ஆடிவந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் சரியாக ஆடவில்லை. இந்திய அணிக்கு பலமுறை சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார் முரளி விஜய். 

தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ள முரளி விஜய்க்கு, இனிமேல் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால் தொடக்க வீரருக்கான போட்டி கடுமையாக உள்ளது. பிரித்வி ஷா அபாரமாக ஆடியுள்ளார். ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. ராகுல், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ரோஹித் சர்மா என ஒரு படையே தொடக்க வீரர்களுக்கான போட்டியில் உள்ளது. இவர்களை எல்லாம் மீறி மீண்டும் முரளி விஜய் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது சந்தேகமான ஒன்றுதான். 
 

click me!