
கிறிஸ் கெய்லின் அதிரடி அரைசதத்தால் ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை பால்க் லெஜண்ட்ஸ் அணி முதன்முறையாக வென்றது.
இந்தியாவில் ஐபிஎல்லைப் போல பல நாடுகளில் டி20 பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் ஆஃப்கானிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் நடப்பு சீசனின் இறுதி போட்டியில் ரஷீத் கான் தலைமையிலான காபூல் அணி மற்றும் முகமது நபி தலைமையிலான பால்க் லெஜண்ட்ஸ் அணி ஆகிய இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற காபூல் அணி கேப்டன் ரஷீத் கான், பேட்டிங்கை தேர்வு செய்ததால் காபூல் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் எந்த வீரருமே பெரிதாக சோபிக்கவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் அந்த அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்தது.
133 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பால்க் அணியின் தொடக்க வீரர் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் குவித்தர். இவரது அதிரடி அரைசதம் மற்றும் ரவி போபாராவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் பால்க் அணி 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து முதன்முறையாக ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை பால்க் அணி வென்றுள்ளது.