அவரோட ரெக்கார்ட எடுத்து பாருங்க தெரியும்!! தோனிக்காக வரிந்துகட்டிய தாதா

By karthikeyan VFirst Published Oct 22, 2018, 1:57 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் பேட்டிங் செய்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தார். 62.09 ஸ்டிரைக் ரேட்டுடன் 19.25 சராசரி மட்டுமே வைத்திருந்தார். 

உலக கோப்பையில் தோனி சிறப்பாக ஆடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். 

அண்மைக்காலமாக சரியாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார் தோனி. ஐபிஎல்லில் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு தலைமையேற்று வழிநடத்திய தோனி, சிறப்பாக கேப்டன்சி செய்து மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்ததோடு, பேட்டிங்கும் சிறப்பாக ஆடினார். 16 போட்டிகளில் பேட்டிங் ஆடி 455 ரன்களை குவித்தார். 

ஐபிஎல்லில் அசத்திய தோனி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தோனி கண்டிப்பாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் ஆடுவார் என்றாலும் அவர் மீதான விமர்சனங்களும் அணியில் அவருக்கான இடம் குறித்த பேச்சுகளும் பரவலாக உள்ளன. 

329 ஒருநாள் போட்டிகளில் ஆடி 67 அரைசதங்களுடன் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் தோனி. சிறந்த ஃபினிஷராக வலம்வந்த தோனி, அண்மைக்காலமாக திணறிவருவதால், அவரது சமீபத்திய ரெக்கார்டை வைத்து அவர் மீது விமர்சனங்கள் எழுகின்றன. 

ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் பேட்டிங் செய்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தார். 62.09 ஸ்டிரைக் ரேட்டுடன் 19.25 சராசரி மட்டுமே வைத்திருந்தார். 2018ம் ஆண்டை பொறுத்தமட்டில், 10 போட்டிகளில் பேட்டிங் ஆடியுள்ள தோனி, 67.36 ஸ்டிரைக் ரேட்டுடன் 28.12 ரன்கள் சராசரியை மட்டுமே பெற்றுள்ளார். இந்த புள்ளி விவரங்களை கொண்டு தோனி மீது விமர்சனங்கள் எழுகின்றன. 

இந்நிலையில், தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தோனி உலக கோப்பையில் கண்டிப்பாக நன்றாக ஆடுவார். அதற்கு முன்னதாக அவருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் தோனி சிறப்பாக ஆடவேண்டியது அவசியம். அவரது தற்போதைய ரெக்கார்டை பார்க்காமல், அவரது மொத்த ரெக்கார்டை பாருங்கள் என்று தோனிக்கு ஆதரவாக கங்குலி குரல் கொடுத்துள்ளார். 
 

click me!