அதைப்பற்றிலாம் எனக்கு கவலையில்லை!! காட்டமான கருத்தை கூலாக சொன்ன தொடர் நாயகன் தவான்

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 1:13 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றது. இந்த தொடரின் நாயகனாகவும் கடைசி போட்டியின் ஆட்டநாயகனாகவும் ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றது. இந்த தொடரின் நாயகனாகவும் கடைசி போட்டியின் ஆட்டநாயகனாகவும் ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்று ஆடக்கூடியவர் அல்ல. எப்போதுமே சீராக ஆடி ரன்களை குவிக்கக்கூடியவர். அவரது பார்ட்னரான ரோஹித்தை போல பெரிய இன்னிங்ஸ்களை ஆடாவிட்டாலும், அவரது பணியை சரியாக செய்யக்கூடியவர். 

எனினும் இந்தியாவில் மட்டுமே தவானின் பருப்பு வேகிறது, வெளிநாடுகளில் சொதப்புகிறார் என்ற விமர்சனம் இருந்துவருகிறது. ஆனால் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியவர்தான் தவான். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய தவான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய தவான், சில நல்ல தொடக்கங்களை அமைத்தார்; எனினும் அவற்றை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 5 போட்டிகளில் ஆடி வெறும் 112 ரன்களை மட்டுமே எடுத்ததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியிலும் சரியாக ஆடவில்லை. லக்னோவில் நடந்த இரண்டாவது போட்டியில் ரோஹித்துடன் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். எனினும் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களில் ஆட்டமிழந்த தவான், கடைசி டி20 போட்டியில் ரோஹித் மற்றும் ராகுலின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இந்திய அணி இழந்த நிலையில், பொறுப்புடனும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடி 62 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். தவானின் இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானது. 

இதையடுத்து மூன்றாவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் தவான். பின்னர் பேசிய தவான், தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், நான் களத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று எண்ணினேன். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினார். எங்களது பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானது. களத்திற்கு வந்ததுமே ரிஷப் அடித்து ஆடியதால் நான் அடக்கி வாசித்தேன். பின்னர் நானும் அவருடன் இணைந்துகொண்டேன். என்னை பற்றி வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை, அதை நான் கண்டுகொள்ளவும் இல்லை. நான் எப்போதுமே எனது ஆட்டத்தை ஆடுகிறேன் என தவான் தெரிவித்தார். 
 

click me!