
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணியை வீழ்த்துவதற்காக இந்திய பவுலர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது.
எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. தற்போதைய இந்திய அணி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறந்த அணியாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என இந்திய அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
எனவே ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இந்திய அணியிடத்தில் உள்ளது. மேலும் அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம். பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டு ஆடமால் இருப்பதால், அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து பரிதாபமான நிலையில் உள்ளது. எனவே சரிவிலிருந்து மீள, இந்திய தொடருக்கு முன்னதாக ஸ்மித் மற்றும் வார்னரின் தடையை திரும்பப்பெறுவது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.
ஸ்மித், வார்னர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த அணியை சாதாரணமாக எடை போட இந்திய அணி தயாராக இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட இந்திய பவுலர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் கூட பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால்தான் இந்திய அணி தொடரை இழந்ததே தவிர, பவுலர்களால் அல்ல. ஷமி, உமேஷ், இஷாந்த் என அனைவருமே சிறப்பாகவே செயல்பட்டனர்.
இந்நிலையில் ரஞ்சி டிராபியில் ஆடிவரும் ஷமி, ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகிவருவது குறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய ஷமி, வேகப்பந்து யூனிட்டாக இங்கிலாந்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆஸ்திரேலியாவிலும் சிறப்பாகவே செயல்படுவோம். ஆஸ்திரேலிய தொடருக்காக வீடியோக்களை பார்த்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எந்தமாதிரியான பந்துகளை வீசவேண்டும் என்பதற்காக வீடியோக்களை பார்த்து பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். சரியான லைன் மற்றும் லெந்த்தில் பந்துவீச தீவிர பயிற்சி எடுத்துவருகிறோம். ஸ்மித்தும் வார்னரும் இல்லையென்றால் அது சற்று பலவீனமான அணிதான். எனினும் எங்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம். ஜெயிப்பதும் தோற்பதும் அதிர்ஷ்டத்தையும் சார்ந்த விஷயம். அதனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை. 100 சதவிகிதம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஷமி தெரிவித்துள்ளார்.