டிராவிட் களமிறங்கிட்டாரு.. இனிமேல் கவலையில்லை!! நம்ம பசங்க எப்படி கலக்குறாங்க பாருங்க

By karthikeyan VFirst Published Nov 13, 2018, 11:07 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் சீனியர் வீரர்கள், நியூசிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆட உள்ளனர். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் சீனியர் வீரர்கள், நியூசிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆட உள்ளனர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக பயிற்சி போட்டிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் விதமாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா, ரஹானே, ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, பார்த்திவ் படேல் ஆகிய வீரர்கள், நியூசிலாந்தில் நடக்கும் பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆட உள்ளனர். 

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த ஏ அணியுடன் 3 அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டியும் மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகளிலும் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இந்தியா ஏ அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் ஆடுவது இந்திய வீரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையாகவும் பயிற்சியாகவும் அமையும்.

வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்ததோடு, இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்த நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் ராகுல் டிராவிட். எனவே வெளிநாட்டு மண்ணில் சிறந்த ரெக்கார்டுகளை கொண்டிருப்பதோடு மிகச்சிறந்த கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட்டின் பயிற்சி ரஹானே, பிரித்வி, ரோஹித், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு ஓர் அரிய வாய்ப்பு. 

இந்நிலையில், நியூசிலாந்து தொடர் குறித்து பேசிய ராகுல் டிராவிட், வெளிநாட்டு தொடர்களில் ஆடுவதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகளில் ஆடுவது குறைந்துவிட்டது. முன்புபோல போதுமான பயிற்சி போட்டிகளில் ஆட வீரர்களுக்கு நேரமில்லை. அதிகமான போட்டிகளில் ஆடிக்கொண்டேயிருப்பதால் வீரர்களால் பயிற்சி போட்டிகளில் ஆடமுடிவதில்லை. நியூசிலாந்துடனான போட்டி ஆஸ்திரேலிய தொடருக்கு நல்ல பயிற்சியாக அமையும். இரு நாட்டின் சூழலும் காலநிலையும் வெவ்வேறுதான் என்றாலும் நியூசிலாந்தில் ஆடுவது நல்ல பயிற்சியாக அமையும்.

தற்போதைய இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் நியூசிலாந்தில் பெரிதாக ஆடியதில்லை என்பதால் அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. வெளிநாடுகளில் ஆடுவதற்கான நல்ல பயிற்சியாகவும் சவாலாகவும் நியூசிலாந்து தொடர் அமையும். ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் இந்திய அணி நியூசிலாந்திற்கு செல்ல உள்ளதால் அதற்கும் இது உதவும். வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற வேண்டும் என்பதுதான் இலக்கு என்று டிராவிட் தெரிவித்துள்ளார். 
 

click me!