டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகல்

By karthikeyan VFirst Published Jun 28, 2021, 9:48 PM IST
Highlights

ரஃபேல் நடாலை தொடர்ந்து பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸும் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார்.
 

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகிவருகின்றனர். இந்நிலையில், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய டென்னிஸ் பிரபலங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஃப்ரெஞ்சு ஓபன் டென்னிஸில் 4வது சுற்றில் தோல்வியடைந்தார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ், 24வது முறையாக க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 24வது முறையாக க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால், மகளிர் டென்னிஸில் அதிக க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன்செய்வார். 

ஆனால் அதை அவ்வளவு எளிதாக வெல்ல முடியாமல் போராடுகிறார். கடைசி 4 க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுகளில் தோற்று, 24வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுவருகிறார். 

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக ஏற்கனவே ரஃபேல் நடால் அறிவித்த நிலையில், அவரைத்தொடர்ந்து செரீனா வில்லியம்ஸும் ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார். தனக்கு 39 வயது ஆகிவிட்டதை சுட்டிக்காட்டியதுடன், தனக்கு ஒலிம்பிக்கில் ஆட வேண்டும் என்று தோன்றவில்லை என்றும் செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!