ஆட்டத்துல கவனம் செலுத்துங்க.. தேவையில்லாததை பேசாதீங்க!! முரளி விஜய்க்கு எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Oct 5, 2018, 10:11 AM IST
Highlights

தன்னை அணியிலிருந்து நீக்கியது குறித்து தேர்வுக்குழு சார்பில் தன்னை தொடர்புகொண்டு பேசவில்லை என்ற முரளி விஜயின் குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
 

தன்னை அணியிலிருந்து நீக்கியது குறித்து தேர்வுக்குழு சார்பில் தன்னை தொடர்புகொண்டு பேசவில்லை என்ற முரளி விஜயின் குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்த முரளி விஜய், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பினார். கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடிய முரளி விஜய், அண்மையில் நடந்த தொடரில் சொதப்பினார். 

இங்கிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்தில் ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டு ஆட திணறினார். இந்த 26 ரன்களுமே முதல் டெஸ்டில் எடுக்கப்பட்டதுதான். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே டக் அவுட்டானார். 

முரளி விஜயின் மோசமான ஆட்டத்தால் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு முரளி விஜய், கவுண்டி கிரிக்கெட்டில் ஆடினார். தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணியில் சேர்க்கப்படாததால், விஜய் ஹசாரே தொடரில் ஆடிவருகிறார். முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை எட்ட இன்னும் 67 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருக்கிறது. 

ஆனால் இனிமேல் முரளி விஜய் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால் தொடக்க வீரருக்கான போட்டி கடுமையாக உள்ளது. ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. தவான், மயன்க் அகர்வால், பிரித்வி ஷா என ஒரு படையே தொடக்க வீரர்களுக்கான போட்டியில் உள்ளது. இவர்களை எல்லாம் மீறி மீண்டும் முரளி விஜய் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது சந்தேகமான ஒன்றுதான். 

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வாய்ப்பே வழங்கப்படாமல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கருண் நாயர் புறக்கணிக்கப்பட்டார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் ஏன் ஒதுக்கப்பட்டேன் என்பதே தெரியவில்லை என கருண் நாயர் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கருண் நாயரிடம் தேர்வுக்குழு பேசியதாகவும் உள்ளூர் போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடினால், டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

கருண் நாயருக்கு ஆதரவாக தேர்வாளர்களை ஹர்பஜன் சிங்கும் சாடியிருந்தார். எதனடிப்படையில் வீரர்கள் தேர்வு நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஹர்பஜன் சிங் சாடியிருந்தார். 

இந்நிலையில், விஜய் ஹசாரேவில் ஆடிவரும் முரளி விஜய், அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசுகையில், இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து தேர்வுக்குழு தலைவரோ அல்லது மற்றவர்களோ என்னிடம் எதுவுமே பேசவில்லை. இதுவரை யாருமே என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. அணி நிர்வாகத்தினரிடம் இங்கிலாந்தில் இருக்கும்போது நான் பேசினேன். அவ்வளவுதானே தவிர வேறு யாருமே என்னிடம் பேசவில்லை என முரளி விஜய் தெரிவித்திருந்தார். மேலும் எதனடிப்படையில் வீரர்கள் தேர்வு நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியதை தான் வழிமொழிவதாக கூறியிருந்தார்.

முரளி விஜயின் குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அணியிலிருந்து நீக்கப்படுவது குறித்து தன்னிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று முரளி விஜய் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. தேர்வு குழுவைச் சேர்ந்த தேவங் காந்தி முரளி விஜய் ஏன் நீக்கப்பட்டார் என அவரிடம் எடுத்துரைத்தார். பிறகு எப்படி இதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை என எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார்.

மேலும் இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட பின் முரளி விஜய், கவுண்டி கிரிக்கெட்டில் எப்படி பங்கேற்றார்? நாங்கள் பேசாமலா இது நடந்தது? இந்திய கிரிக்கெட் வாரியம்தான் அதை செய்து கொடுத்தது. விஜய் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தேவையில்லாததை பேச வேண்டாம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
 

click me!