அவங்க 2 பேரையும் ஏன் எடுக்கல..? நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க.. தேர்வாளர்களை தெறிக்கவிட்ட கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Oct 4, 2018, 5:13 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தேர்வு குறித்து தேர்வாளர்களை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தேர்வு குறித்து தேர்வாளர்களை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

ரோஹித் சர்மா, கருண் நாயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ரோஹித் சர்மா சேர்க்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். கருண் நாயர் சேர்க்கப்படாததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்காத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார். 

இதுவே கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரில் ஒருவரை கூட சேர்க்காததை கவாஸ்கர் விமர்சித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணி தேர்வாளர்களின் இந்த நடவடிக்கையை கவாஸ்கர் விமர்சித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ஓய்வு அளிக்க வேண்டிய தேவையில்லை. அப்படியே ஓய்வு அளிப்பதாக இருந்தாலும் ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கலாமே தவிர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கக்கூடாது. டெஸ்ட் போட்டிகளில் அணியின் சிறந்த வீரர்களுடன் தான் களமிறங்க வேண்டும் என கவாஸ்கர் காட்டமாக தேர்வாளர்களை விமர்சித்துள்ளார். 
 

click me!