இப்படி ஒரு வீரரை ஓரமா உட்கார வைக்க எப்படித்தான் மனசு வருதோ..? அதிரடி மன்னனுக்காக வரிந்துகட்டிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Nov 11, 2018, 12:33 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் தொடர் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இது முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இது முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. 

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒதுக்கப்பட்டார். 

ரோஹித் சர்மா வேண்டுமென்றே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார் என்றும் மீண்டும் டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்தன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்சாகும் என்பதால், பவுன்ஸரை சிறப்பாக ஆடக்கூடிய ரோஹித் சர்மா கண்டிப்பாக அணியில் தேவை என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல், பிரித்வி, முரளி விஜய் ஆகியோரும் அணியில் இருப்பதால் ரோஹித் தொடக்க வீரராக களமிறக்கப்படுவாரா அல்லது மிடில் ஆர்டரில் ஆடுவாரா என்பது கேள்வியாக உள்ளது. 

அதேபோல டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து இந்தியா டிவிக்கு சேவாக் அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா குறித்து பேசிய சேவாக், ரோஹித் சர்மா கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை விளாசிய வீரரை டெஸ்ட் போட்டிகளில் ஓரமாக உட்கார வைக்கக்கூடாது. இதை நான் நீண்ட காலமாகவே கூறிவருகிறேன். இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும், தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் வேகமாக வரும். ஆஸ்திரேலியாவில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். எனவே பவுன்ஸை நன்றாக ஆடினால், ஆட்டத்தின் எந்த நாளிலும் ஸ்கோர் செய்யலாம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!