
1983க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 உலக கோப்பையை வென்று அசத்தியது. இறுதி போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியை அவ்வளவு எளிதாக கிரிக்கெட் ரசிகர்களால் மறந்துவிட முடியாது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட்டாகிவிடுவார். சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவிக்கும். பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் 3வது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி சென்றார். தோனி சிறப்பாக ஆடி, இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் பலரும் இன்றுவரை யோசிக்கும் விஷயம், யுவராஜ் இறங்காமல் தோனி ஏன் இறங்கினார் என்பதுதான்.
அதை, தோனி எடுத்த முடிவாகத்தான் ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். இந்நிலையில், கோலிக்கு பிறகு தோனியை இறங்க சொன்னது சச்சின் தான் என சேவாக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சேவாக், காம்பீரும் கோலியும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தனர். இடது - வலது பேட்ஸ்மேன் இணை தொடரும் வகையில், கோலி அவுட்டானால் தோனி இறங்குமாறும், காம்பீர் அவுட்டானால் யுவராஜை இறக்குமாறும் சச்சின் அறிவுறுத்தினார். அதனடிப்படையில், மூன்றாவது விக்கெட்டாக கோலி அவுட்டானதும் தோனி களத்திற்கு சென்றார் என சேவாக் தெரிவித்துள்ளார்.
யுவராஜுக்கு முன்னதாக தோனி களமிறங்கியது, தோனி எடுத்த முடிவுதான் என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு சேவாக் சொன்ன ரகசியம் வியப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.