போட்டிக்கு இரண்டு பேரு இந்த மாதிரி கிளம்பி கோலியை டென்ஷன் பண்றாங்க

By karthikeyan VFirst Published Aug 31, 2018, 1:52 PM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 200 ரன்களுக்கு உள்ளாக முடிந்திருக்க வேண்டிய இன்னிங்ஸ், மொயின் அலி-சாம் கரன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 246 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டெழுந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. ஜென்னிங்ஸ்(0), குக்(17), ஜோ ரூட்(4), ஜானி பேர்ஸ்டோ(6) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 36 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு, கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ்-பட்லர் ஜோடி இம்முறையும் நம்பிக்கையை விதைத்தது. எனினும் அந்த ஜோடி நிலைக்கவில்லை. பட்லரையும் ஸ்டோக்ஸையும் ஷமி வீழ்த்தினார்.

ஆனால் இம்முறை மொயின் அலி-சாம் கரன் ஜோடி இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 521 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடி, சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி இந்திய பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. விக்கெட்டையும் விட்டுவிடாமல் அதேநேரத்தில் ரன்களையும் குவித்தது. 5வது விக்கெட்டுக்கு 169 ரன்களை சேர்த்தது. பட்லர் சதமும் ஸ்டோக்ஸ் அரைசதமும் அடித்திருந்தனர். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஜோடி இந்திய அணியை அவ்வளவு எளிதாக வெற்றி பெற விடவில்லை.

அதேபோல, நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே அந்த அணியை 200 ரன்களை எட்டவிடாமல் சுருட்டிவிடுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் கடந்த முறை பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடி போல இந்த முறை மொயின் அலி-சாம் கரன் ஜோடி நிலைத்து நின்று, இந்திய பவுலர்களை சோதித்துவிட்டனர். இருவரும் சிறப்பாக ஆடி, 7வது விக்கெட்டுக்கு 81 ரன்களை குவித்தது. மொயின் அலி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய சாம் கரன் 78 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக அவுட்டானார். 

200 ரன்களுக்கு உள்ளாக முடிந்திருக்க வேண்டிய இன்னிங்ஸ், இவர்களின் பார்ட்னர்ஷிப்பால்,, 246 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் கோலியின் வியூகமும் இதுபோன்ற சமயங்களில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. 
 

click me!