ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா பி!!

By karthikeyan VFirst Published Aug 31, 2018, 12:56 PM IST
Highlights

நான்கு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி அணி, தொடரை வென்றது. 
 

நான்கு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி அணி, தொடரை வென்றது. 

இந்தியா ஏ, இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகள் கலந்துகொண்டு ஆடிய ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்தது. 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ, மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகளும் இந்த தொடரில் மோதின. இந்த தொடரின் இறுதி போட்டியில் மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி அணியும் ஆஸ்திரேலியா ஏ அணியும் மோதின. 

இதில் டாஸ் வென்ற இந்தியா பி அணி, பவுலிங் தேர்வு செய்ததால், ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா 23 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். அதன்பிறகு மார்னஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷார்ட், 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

ஷார்ட்டுக்கு பிறகு அலெக்ஸ் கேரி மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அவரும் 53 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால், அந்த அணி 47.5 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

226 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா பி அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் 13 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடி ரன் குவித்த மற்றொரு தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஒரு விக்கெட்டை மட்டுமே இந்திய அணி இழந்தது. மனீஷ் பாண்டேவும் ஷுப்மன் கில்லும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியடைய செய்தனர். 

36.3 ஓவர்களிலேயே இந்தியா பி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நான்கு அணிகளுக்கு இடையேயான தொடரை வென்றது. மனீஷ் பாண்டே 73 ரன்களுடனும் கில் 66 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 

click me!