ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 2013ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வரும் அவர், அவ்வப்போது வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சச்சின் டெண்டுல்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் அவர், உள்ளூர் ரசிகர்கள், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளூர் மக்களுடன் கல்லி கிரிக்கெட் போட்டி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதிக்கு சென்ற சச்சின், உள்ளூர் இளைஞர்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். முதல் 5 பந்துகளை சரியாக அடித்த அவர், கடைசி பந்தில் பேட்டை தலைகீழாக பிடித்துக் கொண்டு தன்னை அவுட் ஆக்குமாறு சவால் விட்டார். ஆனால், கடைசி பந்தையும் அவர் சரியாக அடித்தார்.
Cricket & Kashmir: A MATCH in HEAVEN! pic.twitter.com/rAG9z5tkJV
— Sachin Tendulkar (@sachin_rt)
அதன்பிறகு, உள்ளூர் ரசிகர்களுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த மகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களிலும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
“ஜம்மு காஷ்மீர் வீதிகளில் கடந்த காலங்களில் கிரிகெட் விளையாடவே பயப்படுவார்கள். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.” எனவும், ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் சச்சின் கிரிக்கெட் விளையாடுகிறார். அமைதியான காஷ்மீரை காண பாகிஸ்தானுக்கு பொறுக்காது எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
in Kashmir playing cricket in Streets,
Definitely will be crying watching 👏🇮🇳💪 pic.twitter.com/RMLpPyrZoj
ஜம்மு-காஷ்மீருக்கு சச்சின் முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். நேற்று முன்தினம் அவர் விமானத்தில் பயணித்த காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். ‘பூமியில் இருக்கும் சொர்க்கமான காஷ்மீரை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.’ என அதில் அவர் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இறுதி எல்லையைக் குறிக்கும் அமன் சேது பாலத்தை சச்சின் டெண்டுல்கர் பார்வையிட்டார். அமன் சேதுவை ஒட்டிய செக்போஸ்டில் நிலைகொண்டிருந்த வீரர்களுடன் அவர் உரையாடி மகிழ்ந்தார். மேலும், உள்ளூர் பேட் தொழிற்சாலைக்கு சென்ற சச்சின், தனது முதல் காஷ்மீர் வில்லோ பேட் பற்றி நினைவு கூர்ந்தார்.
இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை; முரண்டு பிடிக்கும் சீனா; உதவிக்கு வரும் அமெரிக்கா!!
சச்சின் டெண்டுல்கர் ஜம்மு-காஷ்மீரில் எங்கு சென்றாலும் அவருக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவர், தெருக்களில் கிரிக்கெட் விளையாடியபோதும், அவருக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.