இந்திய மூத்த கிரிக்கெட் வாரியம் நடத்தும் முன்னாள் வீரர்களுக்கான இந்திய வெட்டரன் பிரீமியர் லீக் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல் தொடர் போன்று எஸ்ஏ20 லீக், கரீபியன் டி20 லீக், அமெரிக்கன் பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், அமெரிக்கன் டி20 சாம்பியன்ஷிப் என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தான் இந்திய மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முதல் முறையாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்திய வெட்டரன் பிரீமியர் லீக் எனப்படும் ஐவிபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.
இந்த தொடரில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், ஹெர்செல் கிப்ஸ் ஆகியோர் உள்பட முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் விவிஐபி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் லெஜெண்ட்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, சட்டீஸ்கர் வாரியர்ஸ், தெலங்கானா டைகர்ஸ் மற்றும் மும்பை சாம்பியன்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
கேப்டன்கள்:
மும்பை சாம்பியன்ஸ் – வீரேந்திர சேவாக்
தெலங்கானா டைகர்ஸ் – கிறிஸ் கெயில்
விவிஐபி உத்தரபிரதேசம் - சுரேஷ் ரெய்னா
ரெட் கார்பெட் டெல்லி – ஹெர்செல் கிப்ஸ்
வரும் 23ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியிலேயே சேவாக் மற்றும் கெயில் அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் மோதுகின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2 அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மோதும். வரும் மார்ச் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த தொடர் முழுவதும் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.