
ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத் ஆகிய இருவரும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.8.4 கோடிக்கும் ஜெய்தேவ் உனாத்கத்தை அதே 8.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராத்வெயிட், பூரான், ஹெட்மயர் ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலம் போயினர். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், மும்பையை சேர்ந்த ஷிவம் துபே, முகமது ஷமி, கோலின் இங்கிராம் ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலம் போயினர்.
ஒரு காலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கை இம்முறை ஏலத்தின் முதல் சுற்றில் அவரது அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாவது சுற்றில் யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு எடுத்தது. அதேபோல மும்பை அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மலிங்காவையும் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை அணி எடுத்தது.
இவர்கள் இருவரை தவிர மும்பை அணி ஏலத்தில் எடுத்த மற்ற வீரர்கள் அனைவருமே இளம் வீரர்கள். பங்கஜ் ஜெய்ஸ்வால், ரசிக் தர், அன்மோல்பிரீத் சிங், பரீந்தர் ஸ்ரான் ஆகிய நான்கு இளம் வீரர்களை மும்பை அணி எடுத்தது.
இந்நிலையில், யுவராஜ் சிங் மற்றும் லசித் மலிங்கா ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். மேலும் இளம் வீரர்கள் மற்றும் யுவராஜ், மலிங்கா ஆகிய அனுபவ வீரர்கள் என நல்ல கலவையில் மும்பை அணி ஏலம் எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், மயன்க் மார்க்கண்டே, ராகுல் சாஹர், ஆதித்யா டரே, எவின் லெவிஸ், கீரன் பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லனெகன், ஆடம் மில்னே, பெரெண்டோர்ஃப், அனுகுல் ராய், சித்தேஷ் லத், யுவராஜ் சிங், லசித் மலிங்கா, பங்கஜ் ஜெய்ஸ்வால், ரசிக் தர், அன்மோல்பிரீத் சிங், பரீந்தர் ஸ்ரான்.