நல்லாத்தான் ஆடுனோம்.. ஆனால் எங்களோட மொத்த திட்டத்தையும் பாழாக்கி டீமையே செதச்சது அவருதான் - ரோஸ் டெய்லர்

By karthikeyan VFirst Published Jan 29, 2019, 12:12 PM IST
Highlights

மூன்றாவது போட்டியில் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடியை எதிர்கொள்வதற்கான பக்காவான திட்டத்துடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. வழக்கமாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும் குல்தீப் - சாஹலை நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடினர் நியூசிலாந்து வீரர்கள். குல்தீப் யாதவிற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை. சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 

முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி மீது இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகளில் ஒரு சூழ்நிலையில் கூட அந்த அணி, இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தவோ, நெருக்கடி கொடுக்கவோ இல்லை. மூன்றாவது போட்டியில் டெய்லர் - லதாம் பார்ட்னர்ஷிப் மட்டும் தான் அந்த அணியின் குறிப்பிடத்தகுந்த ஆட்டம்.

இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்தான். குல்தீப்பும் சாஹலும் நியூசிலாந்து பேட்டிங் வரிசையை சரித்துவிட்டனர். போட்டிக்கு தலா 6 விக்கெட்டுகள் வீதம் இருவரும் இணைந்து முதல் 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குல்தீப் மற்றும் சாஹலின் பவுலிங் தான் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மிடில் ஓவர்களில் இவர்கள் இருவரும் இணைந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதால் அது எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதைத்தான் நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் செய்தனர். 

குல்தீப் மற்றும் சாஹலின் பவுலிங்கை கணித்து ஆடாதவரை, இந்திய அணியை நியூசிலாந்து வீழ்த்துவது கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூட கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடியை எதிர்கொள்வதற்கான பக்காவான திட்டத்துடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. வழக்கமாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும் குல்தீப் - சாஹலை நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடினர் நியூசிலாந்து வீரர்கள். குல்தீப் யாதவிற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை. சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலிரண்டு போட்டிகளிலும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின் ஜோடியை, நேற்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்த விடவில்லை நியூசிலாந்து வீரர்கள். எனினும் அவர்கள் விட்டதை ஹர்திக் பாண்டியா செய்துவிட்டார். வில்லியம்சனின் அபாரமான கேட்ச் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருவரை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. சஸ்பெண்டிலிருந்து மீண்டுவந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இது மிகச்சிறந்த கம்பேக்காக அமைந்தது. 

இந்நிலையில், போட்டி முடிந்ததும் இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அனுபவ வீரர் ரோஸ் டெய்லர், குல்தீப்பும் சாஹலும் பந்துவீச வரும்போது, அவர்கள் நல்ல பந்துகளை வீசப்போகின்றனர் என்கிற எண்ணத்துடன் மிகவும் கவனமாக அவர்களை எதிர்கொண்டு ஆட வேண்டும். அவர்களின் முதல் 2-3 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது. அப்படி இழந்தால் அடுத்ததாக வரும் புதிய பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்திவிடுகின்றனர். எனவே எல்லா பந்துகளையுமே அவர்கள் நல்ல பந்துகளாக போடப்போகிறார்கள் என்கிற எண்ணத்துடன் எதிர்கொண்டு ஆட வேண்டும். குறிப்பாக விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. இதை மூன்றாவது போட்டியில் சரியாகவே செய்தோம். அவர்கள் இருவரும் இணைந்து 2 விக்கெட்டுகள் மட்டும்தான் வீழ்த்தினர். அவர்களை சமாளித்துவிட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்ததோடு மிடில் ஆர்டரில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்துவிட்டார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருப்பது, அணிக்கு நல்ல பேலன்ஸை கொடுக்கிறது என்று டெய்லர் தெரிவித்துள்ளார். 
 

click me!