கேப்டன்னா எப்படி இருக்கணும்..? கோலியின் செவிட்டில் அறைந்த ரோஹித் சர்மா!! கிரிக்கெட் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு

By karthikeyan VFirst Published Sep 29, 2018, 6:26 PM IST
Highlights

ஆசிய கோப்பையை வென்றதற்கு பிறகு ரோஹித் சர்மா கொடுத்திருக்கும் பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

ஆசிய கோப்பையை வென்றதற்கு பிறகு ரோஹித் சர்மா கொடுத்திருக்கும் பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு அளிக்கப்பட்ட ஓய்வால், கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா, தனது கேப்டன்சி திறமையை நிரூபித்தார். அணியை சிறப்பாக வழிநடத்தி 6 அணிகள் கலந்துகொண்டு ஆடிய ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். 

ஏற்கனவே விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ள ரோஹித், இந்திய அணியை வழிநடத்த சரியான கேப்டன் ரோஹித்தா? கோலியா? என்ற விவாதத்தை தொடங்கிவைத்துள்ளார். 

பவுலர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களை கையாளும் திறன், கள வியூகம், நிதானம் என அனைத்திலுமே கோலியை விட மேம்பட்ட கேப்டன் தான் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கவாஸ்கர், வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கோலிக்கு மிகவும் நெருக்கமான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். 

கோலியின் கேப்டன்சியின் மீதான முக்கியமான விமர்சனம், அடிக்கடி வீரர்களை மாற்றுவது. ஓரிரு போட்டிகளில் சரியாக ஆடாவிட்டால் வீரர்களை மாற்றுவதால் வீரர்களுக்கு அணியில் தங்களது இடம் குறித்த சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். அது அவர்களின் ஆட்டத்தை பாதிக்கும். அதனால் வீரர்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்று கங்குலி போன்றோர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் கோலி, அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். 

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா அடுக்கடுக்கான அதிரடியான கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, இந்திய அணியின் நிரந்தர கேப்டன் பொறுப்பை வழங்கினால் அதை ஏற்றுக்கொண்டு சிறப்பாக அணியை வழிநடத்த தயாராக இருப்பதாக அதிரடியாக தெரிவித்தார். 

மேலும் பல அதிரடிகளை கிளப்பினார். வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும் கோலியை சாடிய ரோஹித் சர்மா, நானும் பயிற்சியாலரும் வீரர்களுக்கு முழு சுதந்திரமும் உறுதியும் அளித்தோம். எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட உத்தரவாதம் அளித்தோம். ஒவ்வொரு அணியிலும் இருக்கும் நிலையற்ற சூழலை புரிந்து கொண்டு அணியை வழிநடத்திச் செல்வது அவசியம். இந்தத் தொடரில் அதை அனைத்தையும் புரிந்து கொண்டு நான் அணியை வழிநடத்தி இருக்கிறேன்.

ஒரு கேப்டன், சக வீரர்களுக்கு நம்பிக்கையை விதைப்பவராக இருக்க வேண்டுமே தவிர பதற்றத்தையும் நாளை விளையாடுவோமா என்ற அச்சத்தையும் உண்டாக்கக்கூடாது. நாங்கள் துபாய் வந்ததுமே தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பாதி ராயுடு ஆகிய இருவரிடமுமே நீங்கள் இந்த தொடர் முழுவதும் விளையாடுவீர்கள். அதனால் எவ்வித அழுத்தமும் இல்லாமல் ஆடுங்கள் என்று உறுதியளித்துவிட்டேன். அவர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இப்படித்தான் வீரர்களை நாம் உருவாக்க வேண்டுமே தவிர இரு போட்டிகள் சிறப்பாக செயல்படவில்லை, அதனால் அடுத்த போட்டியில் ஆடுவோமா என்ற நிலையற்ற தன்மையுடன் வீரர்களை விடக்கூடாது.

நான் அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை அளித்தேன், விளையாட வாய்ப்பும் கொடுத்தேன். வீரர்களின் திறமையை அறிந்து, புரிந்து கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒரு போட்டியில் ஒரு வீரரின் திறமையை தீர்மானித்துவிட முடியாது. என்னைப் பொருத்தவரை இன்னும் இந்திய அணியில் 4வது மற்றும் 6வது வீரருக்குச் சரியான வீரர்கள் இன்னும் அமையவில்லை. உலகக்கோப்பைக்கு இன்னும் சில போட்டிகள் இருப்பதால் அதற்குள் சரியான வீரர்கள் அமைந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இப்போது அதைப்பற்றிப் பேச சரியான நேரம் இல்லை. உலகக் கோப்பை வரட்டும், தெளிவான நிலைப்பாடு எடுப்போம். அடுத்து வரும் போட்டிகள் நாம் கவலைப்படும் இடத்துக்கான வீரர்களைக் கண்டுபிடிக்க சரியான வாய்ப்பாக அமையும் என முதிர்ச்சியுடன் பேசினார். 
 

click me!