உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்.. ஆனா அதுக்கு இதையெல்லாம் செய்யணும்!! நியூசி முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 29, 2018, 3:41 PM IST
Highlights

2019 உலக கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். 
 

2019 உலக கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். 

2019 உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கு தயாராகி கொண்டிருக்கின்றன.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போதைய சூழலில் மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. மேலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

இங்கிலாந்தை போலவே இந்திய அணியும் வலிமையான அணியாக உள்ளது. ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர்கள் சிறந்து விளங்கினாலும் மிடில் ஆர்டர்கள் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டர் தேடுதல் வேட்டை இன்னும் முடிந்த பாடில்லை. தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான தேர்வு நடந்துவருகிறது. 

இவ்வாறு உலக கோப்பைக்கு அனைத்து அணிகளும் தயாராகிவரும் நிலையில், அதற்கு முன்னதாக நடந்த மிகப்பெரிய தொடரான ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி அபாரமாக ஆடி வென்றுள்ளது. இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிளெமிங், இந்திய அணி வலிமையான அணியாக திகழ்கிறது. இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் உலக கோப்பை நடக்கும் சமயம் இங்கிலாந்தில் கோடை காலம் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பது அவசியம். தொடக்க வீரர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட விராட் கோலி இருக்கிறார். தோனியும் அதற்குள் நல்ல ஃபார்முக்கு வந்து உலக கோப்பைக்கு தயாராவது அவசியம். மேலும் கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்களை இந்திய அணி பெற்றுள்ளது என பிளெமிங் தெரிவித்துள்ளார். 
 

click me!