Rohit Sharma : விராட் கோலியின் பதவி பறிப்பு.... இனி ரோகித் தான் கேப்டன்- ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிசிசிஐ

By Ganesh PerumalFirst Published Dec 8, 2021, 8:13 PM IST
Highlights

விராட் கோலி தலைமையில் இதுவரை இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்து 2 உலகக்கோப்பைகளை வென்று தந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2017-ம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அந்த வாய்ப்பு விராட் கோலிக்கு சென்றது. 2017-ம் ஆண்டுக்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்ட கோலி, இந்திய அணியை பல்வேறு உயரங்களுக்கு கொண்டு சென்றார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை அவர் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டி தொடருக்கான கேப்டன் பதவி விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இனிவரும் ஒருநாள் தொடர்களில் ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இனி விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என தெரியவந்துள்ளது.

விராட் கோலி தலைமையில் இதுவரை இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது. 3 போட்டிகள் முடிவில்லை. ஆனால் இவர் கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்தியர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இவர் கேப்டனாக 22 சதங்களை விளாசி உள்ளார். உலகளவில் அதிக சதமடித்த கேப்டன் என்ற சாதனையை ஆஸி வீரர் ரிக்கி பாண்டிங் படைத்துள்ளார். இவர் 23 சதங்கள் விளாசி உள்ளார். இந்த சாதனையை விராட் கோலி எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு சதம் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் தற்போது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அது எட்டாக்கனி ஆகிவிட்டது.

click me!