சச்சினே செய்யாத சாதனையை செய்த ரோஹித்!! பாண்டிங், சங்கக்கரா, கங்குலி, கோலினு ஒருத்தரையும் விட்டுவைக்கல.. சாதனைகளை குவித்த ஹிட்மேன்

By karthikeyan VFirst Published Jan 13, 2019, 11:33 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் சாதனைகளை வாரி குவித்துள்ளார் ரோஹித் சர்மா.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் சாதனைகளை வாரி குவித்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 289 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சதமடித்து தனி ஒருவனாக இலக்கை விரட்டிய ரோஹித் சர்மாவின் போராட்டம் இறுதியில் வீணானது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், ரோஹித் சர்மா சாதனைகளை குவித்துள்ளார். 

இந்த சதத்தின் மூலம் ரோஹித் எட்டிய மைல்கற்களை பார்ப்போம்.

1. இது ரோஹித் சர்மாவின் 22வது சதமாகும். இதன்மூலம் ஏற்கனவே 22 சதங்கள் அடித்த முன்னாள் கேப்டன் கங்குலியை சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா. 

2. 22வது சதத்தை விளாசியதன் மூலம் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின்(49), கோலி(38) ஆகியோருக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை கங்குலியுடன் பகிர்ந்துள்ளார் ரோஹித். ரோஹித் இன்னும் ஒரு சதமடித்தால் கங்குலியை முந்தி, மூன்றாவது இடத்தை தனி நபராக பிடித்துவிடுவார். 

3. ஆஸ்திரேலியாவில் ரோஹித் அடித்த 5வது சதம் இது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். சச்சின், கோலி ஆகிய ஜாம்பவான்கள் கூட இந்த சாதனையை செய்ததில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கராவும் 5 சதங்கள் அடித்துள்ளார். அவருடன் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார் ரோஹித். 

4. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் அடித்த 7வது சதம் இது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கருக்கு(9 சதங்கள்) அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. 

5. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கருக்கு(9 சதங்கள்) அடுத்து ரோஹித் சர்மாதான்(7 சதங்கள்) உள்ளார். இந்த பட்டியலில் 6 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாமிடத்திலும் 5 சதங்களுடன் விராட் கோலி 4ம் இடத்திலும் உள்ளனர். 
 

click me!