ஹர்திக் பாண்டியாவை ஏன் அப்படி செய்தேன்..? வின்னிங் கேப்டன் ரோஹித் விளக்கம்

First Published May 5, 2018, 1:00 PM IST
Highlights
rohit opinion about winning against punjab


வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், பஞ்சாபுடன் மோதிய மும்பை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் கெய்லும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கெய்லின் அரைசதம் மற்றும் கடைசி ஓவரில் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவருக்கு பஞ்சாப் அணி 174 ரன்கள் எடுத்தது.

175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் லீவைஸ், விரைவில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தார். ஆரம்பத்தில், மும்பை அணியின் ரன் வேகம் குறைவாகவே இருந்தது. முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ரன் வேகம் குறைவாக இருந்ததால், சூர்யகுமார் அவுட்டானதும் ஹர்திக் பாண்டியாவை இறக்கிவிட்டார் ரோஹித். ரோஹித்தின் நம்பிக்கையை வீணடிக்காத ஹர்திக் பாண்டியா, அதிரடியாக ஆடினார்.

ஹர்திக்கின் அதிரடி பேட்டிங், மும்பை அணிக்கு உத்வேகம் அளித்தது. அதன்பிறகு குருணல் பாண்டியாவும் ரோஹித்தும் இணைந்து அடித்து ஆடி 19 ஓவரிலேயே இலக்கை எட்டினர். 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய மும்பை கேப்டன் ரோஹித், நல்ல பேட்டிங் வரிசையை கொண்ட பஞ்சாப் அணியை இந்த மைதானத்தில் 174 ரன்களில் தடுத்தது சிறந்த முயற்சி. முதல் பத்து ஓவர்களில் குறைவான ரன்களையே எடுத்திருந்தோம். அந்த நேரத்தில் ரன் வேகத்தை அதிகப்படுத்த வேண்டியிருந்தது. அதனால் தான் நான்காவது இடத்தில் ஹர்திக் களமிறக்கப்பட்டார். ஹர்திக் ஆடிய விதம், உத்வேகத்தை அளித்தது. நான் பின் வரிசையில் களமிறங்கினேன். எந்த மாதிரியான ஷாட்களை அடிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்துவிட்டேன். இலக்கை சேஸ் செய்து வெற்றியடைவது நல்ல உணர்வுதான் என்றார்.
 

click me!