சதத்தோடு சேர்த்து சாதனைகளையும் வாரி குவித்த ரோஹித் - கோலி!!

By karthikeyan VFirst Published Oct 22, 2018, 10:06 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபார சதங்களால் இந்திய அணி 323 என்ற இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபார சதங்களால் இந்திய அணி 323 என்ற இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா 152 ரன்களும் விராட் கோலி 140 ரன்களும் குவித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 246 ரன்களை குவித்தது. இதன்மூலம் இருவரும் இணைந்து பல சாதனைகளை குவித்துள்ளனர். பல மைல்கற்களை எட்டியுள்ளனர். அந்த சாதனைகளை பார்ப்போம்.

1. இந்த போட்டியில் 152 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். ரோஹித் சர்மா நேற்று 150 ரன்களை கடந்தது 6வது முறை. ரோஹித்துக்கு அடுத்த இடத்தில் 5 முறை 150 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர் உள்ளார். டேவிட் வார்னர், ஹாசிம் ஆம்லா, கெய்ல், ஜெயசூரியா ஆகியோர் தலா 4 முறை 150 ரன்களை கடந்துள்ளனர். 

2. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று கோலி அடித்தது 5வது சதம். இதன்மூலம் அந்த அணிக்கு எதிராக அதிக சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். மேலும் இது கேப்டனாக அவர் அடிக்கும் 14வது சதம். இதன்மூலம் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கிற்கு(22 சதங்கள்) அடுத்த இடத்தில் கோலி உள்ளார். 

3. நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 8 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் 194 சிக்ஸர்களுடன் கங்குலியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் உள்ளார். இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் சச்சினை முந்தி இரண்டாவது இடத்துக்கும் 7 சிக்ஸர்கள் அடித்தால் தோனியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தையும் பிடித்துவிடுவார் ரோஹித்.

4. ஒருநாள் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் அதிகமுறை சதங்கள் அடித்த ஜோடிகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது ரோஹித் - கோலி ஜோடி. இருவரும் ஒரே இன்னிங்ஸில் 4 முறை சதம் விளாசியுள்ளனர். இந்த பட்டியலில் டிவில்லியர்ஸ் - ஆம்லா ஜோடி 5 முறை சதமடித்து முதலிடத்தில் உள்ளது. சச்சின் - கங்குலி, ஆம்லா - டிகாக் ஆகியோரும் ஒரே இன்னிங்ஸில் 4 முறை சதமடித்துள்ளனர். 

5. ஒருநாள் போட்டியில் இரண்டாவது பேட்டிங்கில், இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகளில் ரோஹித் - கோலி ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 252 ரன்கள் குவித்த ஷேன் வாட்சன் - பாண்டிங் ஜோடி முதலிடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் 246 ரன்கள் குவித்த ரோஹித் - கோலி ஜோடி இரண்டாவது இடத்தில் உள்ளது. 

6. இரண்டாவது பேட்டிங்கில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டில் காம்பீர் - கோலி ஜோடி இலங்கைக்கு எதிராக குவித்த 224 ரன்கள் தான் அதிகபட்ச இரண்டாவது இன்னிங்ஸ் பார்ட்னர்ஷிப் ஸ்கோராக இருந்தது. 

7. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர்களில் சேவாக்கிற்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 219 ரன்கள் குவித்து சேவாக் முதலிடத்திலும் 152 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 141 ரன்கள் குவித்த சச்சின் மூன்றாவது இடத்திலும் நேற்று 140 ரன்கள் குவித்த கோலி நான்காவது இடத்திலும் உள்ளனர். 
 

click me!