
பிரான்சில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரிலா டோப்ரோஸ்கி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடத்தப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று இறுதி ஆட்டம் நடந்தது.
இன்றைய ஆட்டத்தில் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரிலா டோப்ரோஸ்கி ஜோடியை எதிர்கொண்டது கொலம்பிய வீரர் ராபர்ட் பரா, ஜெர்மனி வீராங்கனை அன்ன லீனா குரோனிபீல்ட் இணை.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கொலம்பிய வீரர் ராபர்ட் பரா, ஜெர்மனி வீராங்கனை அன்ன லீனா குரோனிபீல்ட் இணையை 2-6, 6-2, 12-10 என்ற செட்களில் போராடி தோற்கடித்து போபண்ணா, டோப்ரோஸ்கி ஜோடி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
அதுமட்டுமல்லாமல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் 4-வது இந்தியர் எனும் பெருமையையும் போபண்ணா பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் போபண்ணா 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதற்கு முன், கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ஆசிம்உல் ஹக் குரோஷியுடன் சேர்ந்து விளையாடிய போபண்ணா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்று தோல்வி அடைந்தார்.
ஆனால், இந்த முறை பிரெஞ்சு ஓபனில் கலப்பு இரட்டையரில் விளையாடி, சாம்பியன்பட்டத்தை போபண்ணா கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன் கிராணட்ஸ்லாம் பட்டங்களை மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ், சானியா மிர்சா மட்டுமே பெற்று இருந்தநிலையில், 4-வதாக போபண்ணா இணைந்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.