ஆஸ்திரேலிய அணியின் ஆணவத்தை அடக்கி தன்னம்பிக்கையை தகர்த்த இந்திய அணி!! கடுப்பான பாண்டிங் கண்டபடி திட்டி தீத்துட்டாரு

By karthikeyan VFirst Published Jan 6, 2019, 4:06 PM IST
Highlights

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியின் ஆணவம், தன்னம்பிக்கை ஆகியவற்றை உடைத்தெறிந்துள்ளது இந்திய அணி. இதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி. 

வழக்கமாக எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி அந்த அணியை திக்கு முக்காட வைக்கும் இயல்புடைய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் போட்டி முடிவதற்கு உள்ளாகவே தோல்வியை ஒப்புக்கொண்ட மனநிலையை வெளிப்படுத்துகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் ஆணவம், திமிரு, ஆதிக்கம் என அனைத்தையுமே அடித்து நொறுக்கி, அந்த அணியை தன்னம்பிக்கை இழக்க செய்திருக்கிறது இந்திய அணி. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, முதன்முறையாக நாளை பார்டர் - கவாஸ்கர் டிராபியை கைகளில் ஏந்த உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் புஜாரா அருமையாக பேட்டிங் ஆடி சதங்களை குவித்து, பேட்டிங்கில் அந்த அணியை சோதித்தார். புஜாரா பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை பாடாய் படுத்திய அதேவேளையில், வலுவான பவுலிங் யூனிட்டுடன் அங்கு சென்ற இந்திய அணியின் பும்ரா, பவுலிங்கில் அந்த அணியை தெறிக்கவிட்டார். 20 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திவிடுகிறார்கள் இந்திய பவுலர்கள்.

விக்கெட்டுகளை வீழ்த்துவது ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலிய வீரர்களின் மண்டைக்கே குறிவைத்து அவர்களை அச்சுறுத்தினர் இந்திய பவுலர்கள். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உடலில் காயமில்லாமல் பெவிலியனுக்கு திரும்புவதே அவர்களுக்கு பெரும்பாடாய் இருக்கிறது. மார்கஸ் ஹாரிஸின் மண்டையை இரண்டுமுறை பதம் பார்த்தார் பும்ரா. ஃபின்ச்சின் கைவிரலை உடைத்து அனுப்பினார் ஷமி. இவ்வாறு, வழக்கமாக ஆஸ்திரேலிய பவுலர்கள் செய்யும் வேலையை இந்திய பவுலர்கள் அவர்களை விட சிறப்பாகவே செய்தனர்.

புஜாராவோ ஆஸ்திரேலிய அணியை உச்சகட்ட வெறுப்பாக்கினார். மணிக்கணக்கில் பேட்டிங் ஆடி, அவர்களை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைய செய்தார். புஜாராவின் பெரிய இன்னிங்ஸ், பும்ராவின் மிரட்டலான பவுலிங் ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர்கள் மனதளவில் வீக்காகி போட்டி முடியும் முன்னரே தோல்வியை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டனர். 

கிரிக்கெட் ஆடும் எந்த நாட்டிற்கு சென்றாலும் ஆஸ்திரேலிய அணி தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியின் ஆதிக்கத்தை அடக்கியுள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியின் ஆணவம், தன்னம்பிக்கை ஆகியவற்றை உடைத்தெறிந்துள்ளது இந்திய அணி. இதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி. இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலுமே சிறப்பாக செயல்பட்டதுதான் இதற்குக் காரணம். இந்திய அணியை வீழ்த்த முடியாது என்ற மனநிலை ஆஸ்திரேலிய அணிக்கு வந்துவிட்டதை அவர்களது உடல்மொழியிலிருந்தே உணர முடிகிறது. 

வரலாற்று வெற்றியை இந்திய அணிக்கு தாரைவார்த்து விட்டோமே என்ற மனவேதனையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி மனப்பான்மை கடைசி போட்டியில் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதைக்கண்டு கொதிப்படைந்துவிட்டார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். அதுவும் போட்டி மற்றும் போராட்ட மனப்பான்மையே இல்லாமல் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி அடிபணிந்ததை பாண்டிங்கால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 300 ரன்களுக்கே இன்னிங்ஸை இழந்து, ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் 9வது விக்கெட்டாக நாதன் லயன் ஆட்டமிழந்தார். குல்தீப் வீசிய ஃபுல் லெந்த் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்ததும் எதிர்முனையில் நின்ற ஸ்டார்க்கை பார்த்தார் லயன். ஆனால் ஸ்டார்க் பெரிதாக கண்டுகொள்ளாததால் ரிவியூ கேட்காமல் நடையை கட்டினார் லயன். ரிவியூ இருந்தும் அதை பயன்படுத்தாமல் லயன் பெவிலியனுக்கு சென்றார்.

இது மனதளவில் அந்த அணி தோற்றுவிட்டதன் வெளிப்பாடாகவே இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணியின் மனநிலையை கழுவி ஊற்றியுள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங், லயனின் விக்கெட் ஆஸ்திரேலிய வீரர்களின் மனநிலை குறித்த பல தகவல்களை எனக்கு அறிவிக்கிறது. அவர்கள் விரக்தியில் உள்ளனர். ஆனால் ஏன் விரக்தி ஏற்பட்டுள்ளது? என்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து களத்தில் நிலைத்து நின்றுவிட வேண்டும் என்ற உறுதியான மனநிலை இல்லாமல் போய்விட்டது. 2 ரிவியூவும் கைவசம் உள்ள நிலையில், அவுட்டோ இல்லையோ, அதை பயன்படுத்துவதில் என்ன பிரச்னை? லயனின் அவுட்டை பற்றி சற்றும் கவலைப்படாமல் அதை கண்டுகொள்ளாமல் எனக்கென்ன என்று நிற்கிறார் ஸ்டார்க். உன் விக்கெட்.. நீ வேண்டுமானால் ரிவியூ கேள் என்பதுபோல் உள்ளது ஸ்டார்க்கின் உடல்மொழி. எதிர்முனையில் ஆடும் நமது வீரரை காப்பாற்றுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையே இல்லை என்று கடுமையாக சாடினார் பாண்டிங்.

click me!