தொடர் தோல்வியிலிருந்து மீண்ட பெங்களூரு.. டிவில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

First Published Apr 22, 2018, 11:10 AM IST
Highlights
rcb defeats gambhir lead delhi daredevils


தொடர் தோல்வியை சந்தித்து வந்த பெங்களூரு அணி, டிவில்லியர்ஸின் சிறப்பான பேட்டிங்கால், நேற்று டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

4 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருந்த டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று களம் கண்டன.

பெங்களூருவில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், காம்பீர் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 

ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் சிறப்பாக ஆடி, அந்த அணியின் ஸ்கோர் உயர உதவினர். அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களில் வெளியேறினார். சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய ரிஷப் பண்ட், 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட்டின் அதிரடியால், டெல்லி அணி 174 ரன்கள் குவித்தது.

175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மனன் வோராவும் டி காக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் கோலியும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். களத்தில் இறங்கியது முதலே டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலி அடித்த ஷாட், சிக்ஸரை நோக்கி செல்ல பவுண்டரி லைனில் நின்ற டிரெண்ட் போல்ட், அற்புதமாக கேட்ச் செய்து கோலியை அவுட்டாக்கினார். இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேட்ச் இதுவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். இனிமேல் நடக்கும் போட்டிகளிலும் இதுபோன்ற கேட்ச் பிடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

கோலி அவுட்டான பிறகும், அதிரடியை தொடர்ந்த டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்தார். 39 பந்துகளில் 90 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ், பெங்களூரு அணியை வெற்றியடைய செய்தார். டிவில்லியர்ஸின் அதிரடியால், 18 ஓவரிலேயே இலக்கை எட்டி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 

டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

click me!