'பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருக்க விரும்ப மாட்டேன்'; காரணத்தை சொன்ன அஸ்வின்!

By Rayar r  |  First Published Jan 26, 2025, 5:37 PM IST

பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருக்க ஒருபோதும் விரும்ப மாட்டேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் விரிவாக கூறியுள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த அஸ்வின் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதாவது இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு முடிவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் 2 போட்டிகளில் விளையாட மறுக்கப்பட்டதாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றதாக தகவல்கள் வெளியாயின. 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வை தொடர்ந்து அஸ்வின் அடுத்து என்ன செய்ய போகிறார்? ஏதாவது ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக போகிறாரா? முழு நேர கிரிக்கெட் வர்ணனையாளராக மாறப்போகிறாரா? என பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்குழுத் தலைவராக எதிர்காலத்தில் தான் வரமாட்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். 

Latest Videos

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. இதற்காக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின், ''நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகவோ இல்லை தேர்வுக்குழு உறுப்பினராகவோ இல்லை இதுபோன்ற முடிவெடுக்கும் பொறுப்பிலோ இருப்பதை விரும்ப மாட்டேன். ஏனெனில் இந்தியாவில் திறமையான வீரர்கள் அதிகம் இருப்பதால் தேர்வுக்குழு தலைவரின் பணி மிகவும் கடினமான ஒன்றாகும். வரவிருக்கும் ஐபிஎல் சீசனில், கில் மற்றும் ருதுராஜ் இருவரும் ரன்கள் எடுத்தால், அது தேர்வாளர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களாக, இதுபோன்ற திறமையான வீரர்கள் கிடைத்திருப்பது நமக்கு பெருமையான விஷயமாகும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ''அழுத்தத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு நாம் சில முக்கியத்துவங்களைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், நவீன கிரிக்கெட்டில் பந்தை திறமையாக கையாளும் தன்மை கொண்ட வீரர்கள் ஏராளம் உள்ளனர். அழுத்த சூழ்நிலைகளில் பந்து வீசும் திறன் கொண்ட வீரர்களுக்கு பெரிய போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.

click me!