சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு சவாலன இலக்கு நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து முதலில் பேட்டிங்
இந்தியா இங்கிலாந்து இடையே டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று 2வது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் எந்தவித தயக்கமுமின்றி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
பென் டக்கெட், பில் சால்ட் ஓப்பனிங்கில் களமிறங்கினார்கள். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பில் சால்ட் 4வது பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு தூக்கி அடித்து வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனைத் தொடர்ந்து அதிரடி வீரர் பென் டெக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் தேவையின்றி ரிவர்ஸ் ஷாட் அடித்து 3 ரன்னில் வெளியேறினார்.
வருண் சக்கரவர்த்தி கலக்கல்
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். இந்திய ஸ்பின்னர்களின் ஓவரில் பாரபட்சமின்றி சிக்சர்களை பறக்க விட்டார். அவரைத் தவிர மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். அந்த அணியின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் வெறும் 13 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் சூப்பர் பந்தில் கிளின் போல்டானார்.
இதன்பிறகு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் 30 பந்தில் 45 ரன்கள் அடித்து அக்சல் படேல் பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் லிவிங்ஸ்டனும் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அக்சர் படேல் வீசிய ஷாட்ச் பிட்ச் பந்தை தேவையின்றி ஷாட் அடித்து அவர் கேட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 91/5 என பரிதவித்தது.
பார்ட் டைம் பவுலரும் அசத்தல்
இதற்கிடையே தனது முதல் போட்டியில் விளையாடிய ஜேமி ஸ்மித் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தாவருண் சக்கரவர்த்தி ஓவரில் சூப்பர் சிக்சர் விளாசிய அவர் பார்ட் டைம் ஸ்பின்னர் அபிஷேக் சர்மா ஓவரிலும் பிரம்மாண்டமான சிக்சர் பறக்க விட்டார். ஆனால் அதே ஓவரில் அவசர கதியில் ஒரு ஷாட் ஆடி 22 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து ஜேமி ஓவர்டன் 5 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் மேஜிக் ஸ்பின்னில் போல்டானார்.
மறுபக்கம் பிரைடன் கார்சும் வருண் சக்கரவர்த்தி ஓவரில் இரண்டு அட்டகாசமான சிக்சர்களை பறக்க விட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக 31 ரன்களில் அவர் ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து வீரர்கள் ஒருபக்கம் சிக்சர்களாக விளாச மறுபக்கம் விக்கெட் மழையும் பொழிந்ததால் இங்கிலாந்து 137/8 என திணறிக் கொண்டிருந்தது.
இந்தியாவுக்கு சவாலான இலக்கு
9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெயிலெண்டர்கள் ஓரளவு ரனகள் சேர்த்தனர். அணிக்கு முக்கியமான ரன்கல் சேர்த்த அடில் ரஷித் (10 ரன்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். கடைசியில் ஜோப்ரா ஆர்ச்ச்ரும் 12 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் சாய்த்தார். 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.