
வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஃப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. முதல் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த இரண்டு போட்டிகளிலுமே ரஷீத் கானின் சுழல் தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இரண்டு போட்டிகளிலுமே ஆட்டநாயகன் விருதை ரஷீத் கான் தட்டி சென்றார்.
மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது ஆஃப்கானிஸ்தான்.
146 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வங்கதேச அணியில் முஸ்பிகூர் ரஹீமும் மஹ்மதுல்லாவும் மட்டுமே பொறுப்புடன் ஆடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ரஷீத் கான் வீசினார். வெற்றியை நோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்த வங்க தேச பேட்ஸ்மேன் ரஹீமை கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாக்கினார் ரஷீத் கான்.
ரஷீத் கானின் கடைசி ஓவரை வங்க தேச வீரர்களால் அடித்து ஆடமுடியவில்லை. சிங்கிள்கள் மட்டுமே எடுத்தனர். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட, 2 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. டிரா செய்துவிடுவதற்காக மூன்றாவது ரன் ஓடிய மஹ்மதுல்லா ரன் அவுட்டானார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் நாயகன் விருதை வென்ற ரஷீத் கான், தொடரை வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது நேர்மறையான சிந்தனை நல்ல பலனளித்தது. கூக்ளி மற்றும் லெக் ஸ்பின் பந்துகளை வீசினேன். போட்டியை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவித்து ஆடினேன். கடந்த ஒரு வருடமாக எனது உடல் ஆரோக்கியத்திலும் ஃபிட்னெஸிலும் கவனம் செலுத்துவது அனைத்தையும் மாற்றிவிட்டது. பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க முடிந்தது. ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என ரஷீத் கான் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.