பட்டையைக் கிளப்பிய பட்லர்…. ஒன் மேன் ஆர்மியாக சென்னையை வீழ்த்தி சாதனை… ராஜஸ்தான் ராயல்சின் ஐபிஎல் அதிரடி…

First Published May 12, 2018, 1:14 AM IST
Highlights
Rajasthan Royals won csk in 43rd ipl in jaipur


ஐபிஎல் போட்டியின் 43 ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. ஒன் மேன் ஆர்மியாக பட்லர் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தது. இந்நிலையில் 12-வது ஓவரில் வாட்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து ரெய்னாவும் 52 ரன்களில் சோதி சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய தோனி , பில்லிங்ஸ் கூட்டணி இறுதி கட்டத்தில் எடுத்த முயற்சியால் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு  176 ரன்கள் எடுத்தது.  ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் 4 ஓவர்களில் 48 ரன்கள் குவித்த இந்த ஜோடி ஹர்பஜன் சிங்கின் சுழற்பந்தில் பிரிந்தது. பென் ஸ்டோக்ஸ்  11 ரன்கள் எடுத்து  ஹர்பஜன் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேற அடுத்ததாக கேப்டன் ரஹானே களமிறங்கினார்.

ரஹானே வெறும் 4 ரன்கள் மட்டும்  எடுத்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்ப, சஞ்சு சாம்சன் பட்லருடன் கை கோர்த்தார். இந்த ஜோடி சிறிது நேரம் ஆடி சென்னை அணியினருக்கு தண்ணி காட்ட, சஞ்சு சாம்சனை (21 ரன்கள்) பிராவோ-ரெய்னா ரன் அவுட் ஆக்கினர். அடுத்து களமிறங்கிய பிரசாந்த் சோப்ரா (8 ரன்கள்) தாகூர் பந்தில் கேட்ச் ஆக ஸ்டூவர்ட் பின்னி களத்திற்குள் புகுந்தார். 

ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறு முனையில் திறம்பட ஆடிய ஜோஸ் பட்லர் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு சென்னை அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்த ராஜஸ்தான் அணிக்கு, கடைசி 6 பந்துகளில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பிராவோ வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட பட்லர், ஒரு பந்து மீதமிருக்க ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடிய ஜோஸ் பட்லர் 93 ரன்கள் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

click me!