
முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி.
ஐபிஎல் 11வது சீசனின் 40வது போட்டி ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இருந்த ராஜஸ்தான் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பதற்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லரும் ரஹானேவும் களமிறங்கினர். ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 58 பந்துகளுக்கு 82 ரன்கள் குவித்தார்.
பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது.
159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கெய்ல் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அஷ்வின் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். கருண் நாயர், அக்ஷ்தீப் நாத், மனோஜ் திவாரி, அக்ஸர் படேல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வரிசையாக விழ, மறுபுறம் தொடக்கத்தில் இருந்து பொறுப்புடன் நிதானமாக ஆடிவந்த ராகுல், அரைசதம் கடந்தார். கடைசி மூன்று ஓவரில் 57 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரை வீசிய உனாட்கட், அந்த ஓவரில் வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து 2 ஓவருக்கு 48 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ராகுல் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவை. கடைசி ஓவரின் முதல் பந்தில் ஸ்டோய்னிஸ் அவுட்டானார். இரண்டாவது பந்தில் டை ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை உனாட்கட் நோ-பாலாக வீசினார். ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் அடித்த ராகுல், அடுத்த மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஒருவனாக இலக்கை விரட்டிய ராகுல், 70 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். 10 போட்டிகளில் 471 ரன்கள் குவித்த ராகுல், இதுவரை இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்பதால் ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.
ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.