ஒரு சதம் அடிச்சாலும் சரியான சதம்!! கவாஸ்கருக்கு அடுத்து ராகுல் தான்.. சச்சின், டிராவிட்லாம் கூட செய்யாத சம்பவம்

By karthikeyan VFirst Published Sep 12, 2018, 11:56 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல், புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல், புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-1 என வென்றது. இந்த தொடரின் முதல் மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றியின் விளிம்புவரை சென்று தோல்வியை தழுவிய இந்திய அணி, கடைசி போட்டியிலும் அதேபோல வெற்றி நம்பிக்கையை விதைத்து, ஆனால் இறுதியில் தோல்வியை தழுவியது. 

இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு காரணம். விராட் கோலி மட்டும்தான், கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் நன்றாக ஆடி ரன்களை குவித்தவர். மற்றவர்கள் ஒரு இன்னிங்ஸில் ஓரளவிற்கு ஆடுவது, பிறகு சொதப்புவது என்றே இருந்தனர். 

முதல் போட்டியில் சரியாக ஆடாத தொடக்க வீரர் தவான், இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டு, மீண்டும் அணியில் வாய்ப்பு பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத முரளி விஜய், அதன்பிறகு தொடரிலிருந்தே நீக்கப்பட்டார். ஆனால் ராகுலுக்கு மட்டும்தான் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாத ராகுல், கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸ் தவிர்த்து மற்ற 9 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

9 இன்னிங்ஸ்களில் சரியாக ஆடாத ராகுல், கடைசி டெஸ்ட் போட்டியில் 464 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியபோது, முதல் மூன்று விக்கெட்டுகளை 2 ரன்னுக்கே இழந்துவிட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடியாக ஆடி மிரட்டினார். இந்திய அணியை இக்கட்டான நிலையிலிருந்து தனது துணிச்சலான அதிரடி ஆட்டத்தால் மீட்டெடுத்தார். அபாரமாக ஆடி சதமடித்த ராகுல், 149 ரன்களில் அவுட்டானார். 

9 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 150 ரன்கள் மட்டுமே எடுத்த ராகுல், கடைசி இன்னிங்ஸில் 149 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு பயம் காட்டினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தில் ராகுல் உள்ளார். 

1979ம் ஆண்டு இதே ஓவல் மைதானத்தில் கவாஸ்கர், நான்காவது இன்னிங்ஸில் 221 ரன்களை குவித்துள்ளார். இதுதான் நான்காவது இன்னிங்ஸில் இந்திய வீரர் குவித்த அதிகபட்ச ரன். 149 ரன்களை குவித்த ராகுல், கவாஸ்கருக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். 146 ரன்களுடன் இந்த பட்டியலில் திலீப் வெங்சர்க்கார் மூன்றாமிடத்தில் உள்ளார். 
 

click me!