முதல் சதத்திலேயே முறையான சம்பவம் செய்த பண்ட்!! அட.. தோனி கூட செஞ்சது இல்லங்க

By karthikeyan VFirst Published Sep 12, 2018, 11:09 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ரிஷப் பண்ட், புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ரிஷப் பண்ட், புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-1 என வென்றது. இந்த தொடரின் முதல் மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றியின் விளிம்புவரை சென்று தோல்வியை தழுவிய இந்திய அணி, கடைசி போட்டியிலும் அதேபோல வெற்றி நம்பிக்கையை விதைத்து, ஆனால் இறுதியில் தோல்வியை தழுவியது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 464 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள்(தவான், புஜாரா, கோலி) 2 ரன்களிலேயே விழுந்துவிட்டது. 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்திய அணியை ராகுலும் ரஹானேவும் சேர்ந்து மீட்டெடுத்தனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்களை சேர்த்தது. அதன்பிறகு விஹாரியும் டக் அவுட்டானார். அதனால் 121 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, மீண்டும் ராகுலுடன் சேர்ந்து மீட்டெடுத்தவர் ரிஷப் பண்ட். 

ராகுல் - பண்ட் ஜோடி இங்கிலாந்து அணிக்கு பயத்தை காட்டியது. இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் அடித்தும் ஆடியதால், இவர்கள் களத்தில் நிற்கும்போது இங்கிலாந்து வீரர்களிடம் பதற்றத்தை பார்க்க முடிந்தது. ராகுல் சதமடிக்க, அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.  இந்திய அணி இந்த போட்டியில் தோற்றிருந்தாலும், ராகுல் மற்றும் பண்ட்டின் ஆட்டம் அபாரமானது. 

இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், தனது மூன்றாவது போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். 114 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் அவுட்டானார். போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 

அதாவது, டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார். இந்த பட்டியலில் 149 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் முதலிடத்திலும் 117 ரன்களுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கானும் உள்ளனர். இவர்களை தொடர்ந்து 114 ரன்களுடன் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இன்னிங்ஸில் தோனி உட்பட வேறு எந்த இந்திய விக்கெட் கீப்பரும் சதமடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!