எதிரணி பவுலர்களுக்கு கிரிக்கெட்டையே வெறுக்க வைப்பது எப்படி..? வெற்றி ரகசியத்தை வெளியிட்ட புஜாரா

By karthikeyan VFirst Published Jan 5, 2019, 4:25 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா, தனது வெற்றி ரகசியத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 
 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா, தனது வெற்றி ரகசியத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் புஜாரா. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட வென்றிராத இந்திய அணி நடப்பு தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் புஜாரா தான். 

இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக புஜாரா இருந்திருக்கிறார். நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 3 சதங்கள் புஜாரா அடித்தவை, ஒரு சதம் மட்டும் கோலி அடித்தார். ஒரு பேட்ஸ்மேன் சதமடிப்பது முக்கியமல்ல, அந்த சதம் அணியின் வெற்றிக்கு பயன்பட்டிருக்கிறதா என்பதில் தான் அந்த சதத்துக்கான மதிப்பு உள்ளது. 

அந்த வகையில் புஜாராவின் சதம் அபாரமானது. புஜாரா சதமடித்த அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. சிட்னியில் நடந்துவரும் போட்டியில் 193 ரன்களை குவித்தார் புஜாரா. இந்த போட்டியிலும் இந்திய அணியின் கை ஓங்கியிருக்கிறது. 

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமே புஜாரா தான். தொடர் முழுவதுமே புஜாரா அபாரமாக ஆடிவருகிறார். 1250க்கும் அதிகமான பந்துகளை இந்த தொடரில் எதிர்கொண்ட புஜாரா, ராகுல் டிராவிட்டின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். புஜாரா மந்தமாக ஆடுவதாக விமர்சனங்கள் இருந்தாலும், டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் அவரது ஆட்டம் சரியானதுதான். புஜாரா மணிக்கணக்காக சளிப்பே இல்லாமல் பேட்டிங் ஆடக்கூடியவர். சிட்னி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் ஆடியுள்ளார். 

புஜாராவின் நிதானமான ஆட்டத்தை கண்டு வியப்படைந்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன், புஜாராவிடம் இன்னும் உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்று வெளிப்படையாகவே கேட்டார். அந்தளவிற்கு பவுலர்களை சோதித்துவிடுவார். 

தனது பேட்டிங் குறித்து பேசியுள்ள புஜாரா, 150 கிமீ வேகத்தில் பந்துவீசினாலும் அதை என்னால் தடுத்து ஆடமுடியும். தடுப்பாட்டம் தான் எனது பலம். நான் தடுப்பாட்டம் ஆடுவது பவுலர்களை களைப்படைய செய்யும். அவர்கள் நம்பிக்கையை இழப்பார்கள். அதன்பிறகு வேறு வழியை தேடுவார்கள். இப்படியாகத்தான் நான் எதிரணி பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுகிறேன். பவுலர்களை களைப்படைய செய்து அவர்களின் நம்பிக்கையை இழக்க செய்வதற்காக நான் ஒருபோதும் வருந்துவதேயில்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார். 
 

click me!