பாண்டிங்கின் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டை வாங்கியது பெரிய விஷயம்தான்!! இந்திய வீரரை தாறுமாறா புகழ்ந்து தள்ளிய பாண்டிங்

By karthikeyan VFirst Published Jan 5, 2019, 4:07 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.
 

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்ற பிறகு, ரித்திமான் சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த சஹா, அதன்பிறகு இந்திய அணியில் ஆடவேயில்லை. இதற்கிடையே ஐபிஎல்லில் ஆடி காயத்தை வளர்த்துக்கொண்டார். அதிலிருந்து அவர் மீள்வதற்குள்ளாக ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட், இங்கிலாந்து சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என காலம் ஓடிவிட்டது. 

சஹா விட்டுச்சென்ற இடத்தை பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை வைத்து நிரப்ப முயன்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். 

ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். விக்கெட் கீப்பிங்கில் சில குறைகள் இருந்தாலும், பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் விளாசிய ரிஷப், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அடித்து சதத்தை தவறவிட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அணியில் தனது இடத்தை மிக வலுவாக தக்கவைத்துள்ளார் ரிஷப்.

இதுவரை 9 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 696 ரன்களை குவித்துள்ளார். 2 சதங்களுமே சாதனை சதங்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே முதன்முறையாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட பேட்டிங்கில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ரிஷப் பண்ட். 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய தோனி, வெறும் 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் 9 போட்டிகளிலேயே 2 சதங்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷப்.

ரிஷப் பண்ட் டெஸ்ட் வீரராக ஜொலித்துவரும் நிலையில், அவருக்கு ஐபிஎல்லில் பயிற்சியளித்துவரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி அளித்த பங்களிப்பின் காரணமாக எப்போதுமே தோனியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தாலும் அவரது டெஸ்ட் கெரியரில் மொத்தமாகவே 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட், அதற்குள்ளாக 2 சதங்களை அடித்துவிட்டார். இந்திய அணிக்காக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் இன்னும் நீண்டகாலத்திற்கு ஆடுவார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் உலகம் இன்னொரு ஆடம் கில்கிறிஸ்டை அடையாளம் கண்டுவிட்டது என்று புகழ்ந்தார். 
 

click me!