சொன்னது புஜாரா.. செஞ்சது பும்ரா!!

By karthikeyan VFirst Published Dec 28, 2018, 2:17 PM IST
Highlights

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் புஜாரா சொன்னதுதான் நடந்தது. புஜாரா சொன்னதை பும்ரா நடத்திக்காட்டினார். 
 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் புஜாரா சொன்னதுதான் நடந்தது. புஜாரா சொன்னதை பும்ரா நடத்திக்காட்டினார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ரன்களில் டிக்ளேர் செய்ய, ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் ஆடியதற்கு எதிர்மாறாக மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 443 ரன்கள் குவித்திருந்தாலும் அதை எடுக்க அதிக நேரமும் அதிக பந்துகளையும் எடுத்துக்கொண்டது. 170 ஓவர்கள் ஆடித்தான் இந்திய அணி அந்த 443 ரன்களை எடுத்ததே தவிர எளிதாக எடுத்துவிடவில்லை. 443 ரன்களுக்கு இது மிக ஓவர்தான். 

அதற்கு காரணம் மெல்போர்ன் ஆடுகளம்தான். பந்துகள் அங்கு சீராக எழவில்லை. தாறுமாறாக எழும்பின. சில பந்துகள் குறைந்த அளவு பவுன்ஸானது, சில பந்துகள் எதிர்பாராத அளவு பவுன்ஸானது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா, இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டதும் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது ஆடுகளத்தின் தன்மை குறித்தும் போட்டியின் போக்கு குறித்தும் புஜாரா சில கருத்துகளை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய புஜாரா, மெல்போர்ன் ஆடுகளம் பேட்டிங் ஆட எளிதான ஆடுகளம் அல்ல. அதிகமான பந்துகளை ஆடித்தான் ரன்களை சேர்க்க முடியும். நான் அதிகமான பந்துகளை ஆடினேன். நான் ஆடிய பந்துகளுக்கு 140 முதல் 150 ரன்களை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் சூழ்நிலையையும் ஆடுகளத்தின் தன்மையையும் கருத்தில் கொண்டு ஆடுவதுதான் முக்கியம். மெல்போர்ன் ஆடுகளம் ஸ்கோர் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் ஒரு நாளில் 200 ரன்கள் அடிப்பது என்பதே கடினமான விஷயம். அந்த வகையில் நாங்கள் முதல் இன்னிங்ஸில் அடித்த ஸ்கோர் அடித்த ஸ்கோர் மிகவும் நல்ல ஸ்கோர். பந்துகள் சீரற்ற நிலையில் எழும்பின. என் கை விரல்களில் சில அடிகள் வாங்கினேன். ரொம்ப கஷ்டப்படுத்தான் சதமடித்தேன். சதத்தை பூர்த்தி செய்வதற்கு நான்கு செசன்கள் பேட்டிங் ஆட வேண்டியிருந்தது. அந்தளவிற்கு கடினமான ஆடுகளம். இது பேட்டிங் ஆடுவதற்கு சவாலான ஆடுகளம் என்பதால் மூன்றாம் நாளிலிருந்து நிலைமை இன்னும் மோசமாகும். பந்துகள் சீரற்ற தன்மையில் எழும்புவதால் மூன்றாம் நாள் பேட்டிங் ஆடுவது மேலும் கடினமான விஷயம்தான் என்றார். 

புஜாரா சொன்னதைப்போலவே நடந்துவிட்டது. மூன்றாவது நாளில் பேட்டிங் ஆடுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. இன்றைய ஆட்டத்தில் மட்டும் 15 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. இன்றைய ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஸ்கோர் மொத்தமாகவே வெறும் 191 ரன்கள் தான். புஜாரா சொன்னதைப்போலவே ஒருநாளில் 200 ரன்கள் அடிப்பது என்பதே கடினமாக அமைந்தது. இந்திய அணி 443 ரன்களை குவித்துவிட்டதால், அதை நெருங்கவேண்டும் என்ற ஆஸ்திரேலிய அணியின் நெருக்கடியை பயன்படுத்தி அவர்களை இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். அதிலும் குறிப்பாக பும்ராவின் பவுலிங் அபாரம். 

பும்ராவின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் சரிந்தனர். மெல்போர்ன் ஆடுகளத்தில் பந்துகள் சீரற்ற தன்மையில் பவுன்ஸ் ஆகின. பொதுவாகவே பும்ரா நல்ல வேரியேஷனில் பந்துவீசக்கூடியவர். இவை இரண்டும் சேர்ந்து இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டன. மெல்போர்ன் ஆடுகளத்தை பொறுத்தமட்டில் முதலில் பேட்டிங் ஆடி நல்ல ஸ்கோரை அடித்துவிட்டால் வெற்றி பெரும்பாலும் சாத்தியமாகிவிடும். அந்த வகையில் இந்திய அணி டாஸ் ஜெயித்தது, மிக முக்கியமான காரணி. 

பும்ரா ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்ததை போலவே பாட் கம்மின்ஸ், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை இரண்டாவது இன்னிங்ஸில் சரித்துவிட்டார். முதல் இன்னிங்ஸில் சமாளித்து ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் புஜாரா, கோலியால் கூட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியவில்லை. இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். 
 

click me!